அரசியல் அனுபவம் இல்லாத விஜய் ஆட்சியைப் பிடித்து எப்படி கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தப்போகிறார். அவரால் அரசியல் முடியாது என எதிர்க்கட்சிகள் உள்பட பொதுமக்களும் நினைத்தனர். ஆனால், பொன்விழா மற்றும் பவளவிழா கண்ட கட்சிகளை தனது அரசியல் வியூகத்தால் வீழ்த்தி வருகிறார் விஜய் என்பதுதான் உண்மை!
தமிழகத்தில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் 6-ந்தேதி நடக்கும் நிலையில், தமிழக அமைச்சர்களை கேரளாவுக்கு 5-ந்தேதி அனுப்பி வைப்பதில் தான் முதல்வர் விஜய்யின் அரசியல் இருக்கி றது என்கிறார்கள்.
கேரளப் பகுதியில் உற்பத்தியாகும் ஆனைமலையாறு நீர், யாருக்கும் பயன்படாமல் வீணாகிறது. அதனால் அந்த நீரை நல்லாறு வழியாகத் திருப்பி தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருமூர்த்திமலை அணைக்குக் கொண்டு வருவதே ஆனைமலையாறு – நல்லாறு திட்டம் ஆகும். இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், ஆண்டுதோறும் சுமார் 8.5 முதல் 9 டி.எம்.சி நீர் திருமூர்த்தி அணைக்குக் கிடைக்கும். இதனால், திருப்பூர்-கோவை மாவட்ட விவசாயிகளின் நீர்ப்பாசண தேவைகள் பெருமளவு பூர்த்தியாகும். அத்திக்கடவு அவினாசி திட்டம் போல, இந்த ஆணைமலையார்-நல்லாறு திட்டமும் கொங்கு மண்டல விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது. இதற்காக பல ஆண்டுகளாக திருப்பூர்-கோவை மாவட்ட விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். ஆனால், தமிழகத்தை இதுவரை ஆண்ட திராவிட கட்சிகள், போராட்டங்கள் நடக்கும் போது அக்கறை காட்டியதை தவிர திட்டத்தை நிறைவேற்றுவதில் உள்ள தடைகளை உடைத்து திட்டத்தின் நோக்கத்தை பூர்த்தி செய்ததில்லை.
இப்படி கிட்டத்தட்ட 60 ஆண்டுகாலமாக கிடப்பில் கிடக்கும் இந்த திட்டத்தை தவெக அரசு முன்னெடுக்குமா? என்கிற எதிர்பார்ப்பு கொங்கு மண்டல விவசாயிகள் மத்தியில் தொடர்ந்து இருந்து வருகிறது. ஆனால், ஆட்சி பொறுப்பேற்ற இந்த 4 மாதங்களில் இத்திட்டம் குறித்து எந்த கவனமும் செலுத்ததாத முதல்வர் விஜய், தற்போது இத்திட்டம் குறித்து கேரள முதல்வரி டம் விவாதிக்க தமிழக அமைச்சர்கள் குழுவை அனுப்பி வைக்கிறார். இங்கு தான் அவரின் தேர்தல் வியூக அரசியல் இருக்கிறது .
அதாவது, இடைத்தேர்தல் நடக்கும் தாராபுரம் தொகுதி, திருப்பூர் மாவட்டத்தில் வருகிறது. இந்த தொகுதியில் தவெக வேட்பாளர் சத்யபாமா வுக்கு ஏக எதிர்ப்புகள் இருக்கின்றன. பல இடங்களில் அவரால் வாக்கு சேகரிக்கக் கூட செல்ல முடியவில்லை. தாராபுரம் தொகுதியில் கொங்கு வேளாள கவுண்டர்கள் சமூகம் தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தி. அதிமுகவின் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, கொங்கு வேளாள கவுண்டர் சமூகம். அந்த வகையில், அதிமுக இங்கு தோல்வி அடைந்தால், எடப்பாடி பழனிச்சாமியே அதாவது கொங்கு வேளாள கவுண்டர் சமூகமே தோற்றுப்போனதற்கு சமம். அதனால், தங்கள் சமூகத்தை சேர்ந்த தலைவர் தோற்றுப்போகக்கூடாது என அச்சமூகத்தினர் கருதுகின் றனர்.
உளவுத்துறை மூலம் இந்த சிந்தனையை அறிந்து கொண்ட முதல்வர் விஜய், தொகுதியில் உள்ள மற்ற சமூகத்தைச் சேர்ந்த விவசாயிகளின் ஆதரவைப் பெற என்ன செய்யலாம் என ஆலோசகர்களிடமும் அதிகாரி களிடமும் விவாதித்த போது தான், 60 ஆண்டு காலமாக விவசாயிகள் போராடும் ஆனைமலையாறு-நல்லாறு திட்டம் குறித்த கோரிக்கை பற்றி விஜய்யிடம் சொல்லப்பட்டுள்ளது. அந்த திட்டம் நிறைவேறாமல் இருக்கும் சூழல்கள் குறித்தும் தடைகள் குறித்தும் விரிவாக எடுத்துச் சொல்லியுள்ளனர். இந்த கோரிக்கையில் தவெக அரசு அக்கறையாக இருப்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்கினால் ஒருவேளை விவசாயிகளின் கவனம் தாராபுரத்தில் தவெக பக்கம் திரும்புவதற்கு வாய்ப்பு இருக்கிறது எனவும் எடுத்துச் சொல்லியுள்ளனர். இதனைத் தொடர்ந்து முடிவானதுதான் கேரளா முதல்வரை தமிழக அமைச்சர்கள் சந்திக்கும் திட்டம். இதற்காக, கேரளா முதல்வர் சதீசனிடம் அரசு சார்பில் நேரம் கேட்கப்பட்டது.
அக்டோபர் இரண்டாவது வாரத்தில் சந்திப்பை வைத்துக்கொள்ளலாம் என கேரள அரசு சார்பில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அவ்வளவு தூரம் தள்ள வேண்டாம். அக்டோபர் 5-ந்தேதி சந்திப்பு நடக்க முதல்வர் விஜய் விரும்புகிறார். அதற்கேற்ப கேரள முதல்வரின் நேரம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என தவெக அரசு சார்பில் மென்மையாக அழுத்தம் தரப்பட்டிருக் கிறது. இதனையடுத்து, கேரள முதல்வர் ஓ.கே. சொல்லியிருக்கிறார். அந்த வகையில் நாளைக்கு இந்த சந்திப்பு நடக்கவிருக்கிறது.
இந்த சந்திப்பை பெரிதாக விளம்பரப்படுத்தவும் முடிவாகியிருக்கிறது. 6-ந்தேதி தேர்தல் நடக்கும் நிலையில், 5-ந்தேதி திருப்பூர் மாவட்ட விவசாயி களின் நீண்ட கால கோரிக்கையான இந்த திட்டத்தை நிறைவேற்ற முதல்வர் விஜய் அக்கறை கொண்டிருக்கிறார் என்கிற தோற்றத்தை வரவழைப்பது மட்டுமே இந்த சந்திப்பின் நோக்கம். ஆனால், தாராபுரம் விவசாயிகளிடம் விஜய் அரசின் இந்த தேர்தல் அரசியல் வியூகம் தாக்கத்தை ஏற்படுத்துமா ?
