கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்ததில் கரப்பான் பூச்சி கட்சியினர் சந்தேகம் கிளப்பியிருப்பது தமிழகத்தில் மீண்டும் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இது தொடர்பாக கடந்த 10 மாதங்களில் மட்டும் 14 முறை ஆட்சேபனை தெரிவித்து கடிதம் எழுதப்பட்டு இருப்பதாகவும் வெளியான தகவல் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே கரப்பான் பூச்சி கட்சியினர் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

2024 லோக்சபா தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சி தலைவர்களை காலி செய்யும் வகையில் வாக்காளர் பட்டியலில் இருந்து மிக பெரியளவில் வாக்குகள் நீக்கப்பட்டதாக கரப்பான் பூச்சி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இதன் காரணமாகவே பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சி தலைவர்கள் அடுத்தடுத்த தேர்தல்களில் தோல்வியடைந்ததாகவும் கர்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே குற்றம்சாட்டியுள்ளார். 2024 தேர்தலின்போது ஒரே அணியாக திரண்டு நின்ற பிராந்திய தலைவர்கள் மட்டும் பின்னர் தோல்வியடைந்தது தற்செயலாக இருக்க முடியாது என்றும் இதில் ஒரு பேட்டர்ன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து கரப்பான் பூச்சி கட்சியினர் மேலும் கூறுகையில், “2024 லோக்சபா தேர்தலில் பாஜகவால் பெரும்பான்மை பெற முடியவில்லை.

400 இடங்களில் வெல்வோம் என்று அவர்கள் முழக்கமிட்டனர். ஆனால், அவர்களால் 200 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இதனால் அவர்களுக்கு பதற்றம் ஏற்பட்டது. லோக்சபா தேர்தலில் விழுந்த அடிக்கு பிறகே நாட்டின் மனநிலை மாறுவதை உணர்ந்தனர். பிராந்திய சக்திகள் வலுவாக உருவெடுத்திருப்பதையும் அவர்கள் உணர்ந்தனர். இதனால் பிராந்திய தலைவர்களை காலி செய்ய திட்டமிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்றார்.

உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ், மு க ஸ்டாலின், பினராயி விஜயன், அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் அடுத்தடுத்து தோல்வியடைந்ததை சுட்டிக்காட்டிய அவர், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் தொகுதியில் 50,000 வாக்குகள் நீக்கப்பட்டு, அவர் சுமார் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததாக தெரிவித்தார்.

மேலும், மு.க. ஸ்டாலின் போட்டியிட்ட தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் நீக்கப்பட்ட நிலையில், அவர் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததாகவும் கூறினார். டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தொகுதியில் 40,000 வாக்குகள் நீக்கப்பட்டதாகவும், அவர் சுமார் 4,000 முதல் 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததாகவும் திப்கே தெரிவித்தார். தலைமை தேர்தல் ஆணையர் 48 மணி நேரத்தில் ராஜினாமா செய்யவில்லை என்றால் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் எனவும் கரப்பான் பூச்சி கட்சி கூறியுள்ளது.

கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட விஎஸ் பாபு 82 ஆயிரம் வாக்குகளை பெற்றார். திமுக தலைவர் ஸ்டாலின் 74 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். இதன் மூலம் சுமார் 8800 வாக்கு வித்தியாசத்தில் ஸ்டாலினை விஎஸ் பாபு தோற்கடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal