சென்னை சர்வதேச விமான நிலையத்தில் லண்டன் செல்ல முயன்ற முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி கே.என்.ரவிச்சந்திரனின் உதவியாளர் குடியுரிமை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் பல்வேறு பணிகளுக்கான ஒப்பந்தங்களை முறைகேடாக வழங்கியதாகவும், ஒப்பந்ததாரர்களிடமிருந்து சட்டவிரோதமாக பணம் பெறப்பட்டதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் மற்றும் கேஎன் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் உதவியாளர் கவி பிரசாத் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கவிபிரசாத், வெளிநாட்டிற்குச் செல்ல முயன்றபோது சென்னை சர்வதேச விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகளால் அதிரடியாகத் தடுத்து நிறுத்தப்பட்டார். ரூ.1,020 கோடி மதிப்பிலான முறைகேடுகள் குறித்து புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் ஏற்கனவே லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், லண்டன் செல்லும் விமானத்தில் பயணிப்பதற்காகச் சென்னை விமான நிலையம் வந்த கவிபிரசாத்தின் பாஸ்போர்ட் மற்றும் பயண ஆவணங்களைக் குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அவர் மீது லுக்-அவுட் நோட்டீஸ் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரது பயணத்தை உடனடியாக ரத்து செய்த அதிகாரிகள், அவரைத் தனி அறையில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்துச் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கவிபிரசாத்திடம் நடத்தப்படும் விசாரணையின் மூலம் இந்த ரூ.1,020 கோடி ஊழல் வழக்கின் பணப் பரிவர்த்தனைகள், போலி கணக்குகள் மற்றும் இதன் பின்னணியில் உள்ள முக்கிய நபர்கள் குறித்தான மேலும் பல முக்கியத் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal