‘தமிழக்தில் ஊழலற்ற நிர்வாகத்தையும், நேர்மையான ஆட்சியையும் கொடுக்கும் த.வெ.க.வுக்கு இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் த.மா.கா. ஆதரவு அளிக்கிறது’ என ஜி.கே.வாசன் அதிரடியாக அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘நடைபெற இருக்கின்ற மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக்கக்கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) ஆதரவு அளிக்கிறது.

தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து துறைகளிலும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அரசாக த.வெ.க அரசு செயல்படுகிறது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி தந்திருக்கிறார்கள்.

பெருந்தலைவர் காமராஜர் அவர்களை கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொண்டு செயல்படுகின்ற த.வெ.க.வின் தலைவரும், தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் மக்களுக்கு நேர்மையான ஆட்சியை, வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்தை கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

குறிப்பாக குறைந்த நாட்களிலேயே தமிழக மக்களுக்கு அதிக நம்பிக்கையை கொடுத்திருக்கிறார் நம் முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள். இதன் மூலம் பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனார் ஆகியோரின் எண்ணங்களுக்கு ஏற்றவாறு வளமான தமிழகத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்ப்பட்டுள்ளது.

எனவே புதிய த. வெ. க. அரசின் நல்ல தூய முயற்சிக்கு நடைபெற இருக்கின்ற மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் த. வெ. க. கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) ஆதரவளிக்கிறது என்பதை த. மா. கா(மூ) சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் இரண்டு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் த.வெ.க.வுக்கு த.மா.கா. ஆதரவு கொடுத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal