ஜெம் வீரமணி மீது பதியப்பட்டு இருக்கும் போக்ஸோ வழக்கு குறித்து திமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், தவெகவின் இந்நாள் சட்டத்துறை அமைச்சரும் மாறி மாறி கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “வீரமணிக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. 2025ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி தன்னார்வாலர் ஒருவர் இது தொடர்பாக வீடியோவுடன் புகார் ஒன்றை தருகிறார். உடனடியாக மறுநாளே அதாவது அக்டோபர் 7ஆம் தேதியே முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துவிட்டோம். அவர் எங்களுக்கு வேண்டியவராக இருந்தால், அக். 6ஆம் தேதி புகார் பெறப்பட்டு, 7ஆம் தேதி வழக்குப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. காலம் தாழ்த்தியிருக்கலாம். ஆனால், 7ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தியபோது, வீடியோ தெளிவாக இல்லாமல் இருந்தது.

நீதிமன்றத்தில் இந்த வழக்கை திரும்ப பெறுகிறோம் என்றோ, கைவிடுகிறோம் என்றோ சொல்லவில்லை. ஆதாரம் கிடைக்கும் வரை பொறுத்திருக்கிறோம். ஆதாரம் கிடைத்தப்பிறகு வழக்கு தொடர்ந்து நடத்தி மேல் விசாரணை நடத்துவோம் என்றுதான் சொல்லினோம். ஆனால், தவெக ஆட்சியில் ஆகஸ்ட் 29ஆம் தேதி புகார் பெறப்படுகிறது. அந்தப் புகாரின் மீது அக்டோபர் 21ஆம் தேதி வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர். இந்த ஆட்சி கோமா நிலையில் இருந்ததா இல்லை காம் டீலிங் எதுவும் பேசியதா என்பது எங்களுக்கு தெரியவில்லை” எனத் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், “முன்னாள் அமைச்சர் ரகுபதியின் பேட்டியை பார்த்தேன். அதில், வீடியோவை பார்த்ததாகவும், அது தெளிவு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். அதனால், போதிய ஆதாரங்கள் இல்லை என்றும், போதிய ஆதாரங்கள் வந்த பிறகு நடவடிக்கை தொடர்கிறோம் என சொன்னோம் என்கிறார். இவர் எப்படி ஐந்து வருடங்கள் சட்டத்துறை அமைச்சராக இருந்தார் என்பதற்கான லட்சணம் இதுலே தெரிகிறது.

வீடியோ ஷேடோவாக (நிழலாக) இருக்கிறது என ரகுபதி எப்படி தெரிவித்தார். அவர் அந்த வீடியோவை பார்த்தாரா அல்லது பார்த்தவர்கள் அவரிடம் தெரிவித்தனரா? வீடியோ ஷேடோவாக இருந்தது என எப்படி சொன்னார் என்பதற்கு முன்னாள் அமைச்சர் ரகுபதி பதில் சொல்லியே ஆக வேண்டும்.

வழக்கை முடிக்கிறோம் எனும் ரீதியில்தான் இவர்கள் நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார்கள். ஒரு அரசாக இருந்தால், ஆதாரங்கள் இல்லை, மேலும் இரண்டு மாதங்கள் அவகாசம் வேண்டும் என்றுதானே கேட்டிருக்க வேண்டும். நல்ல வேளையாக இந்த ஆதாரம் பதிவானதால் அது தப்பித்தது. இல்லை என்றால் திமுக அந்த ஆதாரத்தை அழித்திருக்கும்” எனத் தெரிவித்தார்.

நீதிபதியின் அதிரடி உத்தரவால் உயிர்ப்பித்த விவகாரத்தில் சிக்கப் போவது யார் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal