மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தவெகவை கடுமையாக விமர்சிக்கின்றன.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக மரகதம் குமரவேல் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, அக்கட்சியினர் தலைவரும் தமிழக முதல்வருமான விஜய், வரும் 25-ம் தேதி அச்சிறுப்பாக்கம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிகிறது.
இதற்காக, அச்சிறுப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள வஜ்ரகிரி மலை அடிவாரத்தில் மேடை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இங்கு மேடை அமைப்பதற்காக, தரை சமப்படுத்துதல் உள்ளிட்ட அடிப்படை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தவெக தலைமைக் கழகம் அறிவிப்பின் பேரில் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் தவெக சார்பாக மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்ட எழில் கேத்தரின், இதை நேரில் ஆய்வு செய்தார்.
