‘ஒரே உறையில் இரண்டு கத்திகள்’ இருக்கக் கூடாது (இருக்கவும் முடியாது) என்பார்கள். ஆனால், த.வெ.க. ஆட்சியில் அப்படி இருப்பதால்தான் விவசாயக்கடன் தள்ளுபடி முதற்கொண்டு புதிய தலைமைச் செயலகம் அறிவிப்பு வரை த.வெ.க. அரசு தள்ளாடிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில் உள்ள அனுபவம் வாய்ந்த அதிகாரிகள்!
இது பற்றி கோட்டை வட்டாரத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், ஒரு ஆட்சி திறம்பட செயல்படுவதற்கு இரண்டு தரப்பைதான் முக்கிய காரணியாக சொல்வார்கள். அதாவது தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள்… அடுத்தது முதல்வருக்கு ஆலோசகராக இருப்பவர்கள். ஆனால், த.வெ.க. அரசியல் இந்த இரண்டு தரப்பிற்குள்ளும் நீடிக்கும் பனிப்போர்தான் அக்கட்சிக்கு பொதுமக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறது.

ஆளுங்கட்சியின் இந்த புதிய நிர்வாக முறை, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளிடையே பெரும் விவாதத்தையும் கலவையான கருத்துக்களையும் ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சரின் கீழ் நிர்வாகத்தை யார் வழிநடத்துவது? அரசு கோப்புகளில் யாருக்கு அதிகாரம்? என்பதில் ஆலோசகர்களுக்கும் தலைமைச் செயலாளருக்கும் இடையே பனிப்போர் நிலவுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
கடந்த மே மாதம் முதல்வர் விஜய், விஷ்ணு ரெட்டி மற்றும் ஜான் ஆரோக்கியசாமி ஆகிய இருவரைத் தனது சிறப்பு ஆலோசகர்களாக நியமித்தார். இவர்களுடன் சேர்த்து, முதலமைச்சருக்கு உதவ 30 ஆண்டுகளுக்கு மேல் பணி அனுபவம் கொண்ட தலைமைச் செயலாளர் எம்.சாய் குமார் தலைமையில் நான்கு திறமையான ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட தனி அணியும் செயல்பட்டு வருகிறது.
அதாவது, எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா காலம் தொட்டே முதல்வர்களுக்கு ஆலோசகர்கள செயல்படுவது வழக்கமாக இருந்து வந்தது. ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது, ஷீலா பாலகிருஷ்ணன் (ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளர்) தலைமைச் செயலாளரை விட பவர் புல்லாக வலம்வந்தார். இவர் ஜெயலலிதாவின் மிகுந்த நம்பக்கையைப் பெற்றவராக விளங்கினார். காரணம், எந்தவித விறுப்பு வெறுப்பின்றி உள்ளதை உள்ளபடியே ஜெயலலிதாவிடம் கூறிவந்தார். இதனால் கட்சி நிர்வாகத்திலும், ஆட்சி நிர்வாகத்திலும் எந்தவொரு குளறுபடியும் நடக்கவில்லை. ஆனால், த.வெ.க. ஆட்சியில் ஏராளமான குளறுபடிகள் நடக்கின்றன!
இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், தாராபுரத்தில் த.வெ.க. வேட்பாளர் பிரச்சாரத்திற்கே செல்லமுடியவில்லை. காரணம், விவசாயக்கடனை முழுமையாக ஏன் தள்ளுபடி செய்யவில்லை என மக்கள் கேட்கிறார்கள். விவசாயக் கடன் தள்ளுபடியில் அதிகாரிகள் சில தவறான தகவல்களை முதல்வருக்கு கொடுத்திருக்கிறார்கள். 2025ம் ஆண்டு கடன் வாங்கியவர்களுக்கு மட்டுமே 75 ஆயிரம் ரூபாய் முழு தள்ளுபடி செய்தால் போதும் என அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டருக்கிறது.
உண்மை நிலவரம் என்னவென்றால், 2025ல் பெரும்பாலன விவசாயிகளுக்கு லோன் கிடைக்கவில்லை. காரணம், 2026ல் தேர்தல் வரப்போவதால் தொடக்க வேளான்மை கூட்டுறவு வங்கியல் பணம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அதே சமயம் 2022, 2023, 2024ம் ஆண்டுகளில் வாங்கியவர்களுக்கும் ரூ.75 ஆயிரம் தள்ளுபடி செய்திருக்க வேண்டும். ஆனால், அதிகாரிகள் 2025ஆம் ஆண்டை மட்டும் கணக்கெடுத்து முதல்வரிடம் கொடுத்திருக்கிறார்கள்.
விளைவு, பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சியில் தொடர் போராட்டம் நடந்தது அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு 20 நாட்கள் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது போல இது ஒரு உதாரணம்தான். பல அறிவிப்புகளை அதிகாரிகளின் ஆலோசனைப் படி முதல்வர் அறிவிக்கிறார். எதிர்ப்பு வந்த பிறகு அந்த அறிவிப்பிலிருந்து பின்வாங்குகிறார். இதற்கு உதாரணம் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதை எடுத்துக்கொள்ளலாம்.
ஒரு ஆட்சி சிறப்பாக நடைபெற வேண்டுமென்றால் அரசு நிர்வாகமும், அரசியல் நிர்வாகமும் திறம்பட செயல்படவேண்டும். ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் அரசியல் கட்சியினரை அவருக்கு நம்பகமான அதிகாரிகள்தான் வழிநடத்தினார்கள் என்பதையும் மறுக்க முடியாது. எனவே, கட்சி, ஆட்சி இரண்டும் இரு கண்களைப் போன்றது. இதில் ஒன்று தவறாக செயல்பட்டாலே ஆட்சிக்கும், கட்சிக்கும் அவப்பெயர். ஆலோசர்களின் தலையீட்டால் அதிகாரிகள் த.வெ.க. ஆட்சியில் நடக்கும் தவறுகளை அப்படியே எதிர்க்கட்சித் தலைவர்களிடம் சொல்லிவிடுகின்றனர். இதைவிடக் கொடுமை, ‘முதல்வர் விஜய் அடுத்து என்ன செய்யப்போகிறார்?’ என்பதை வரை எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அதிகாரிகள் சொல்லிவிடுகின்றனர். இதற்கு உதாரணம், சட்டசபையில் அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட இருப்பதை முன்னாள் அமைச்சர் முன்கூட்டியே சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியது. எனவே, இன்னும் அதிகாரிகள் தி.மு.க., அ.தி.மு.க. மீதுதான் அதீத பாசத்தில் இருக்கிறார்கள்!
முதலில் இதற்கு கடிவாளம் போடவேண்டும். அடுத்தது ஆலோசகர்கள் மற்றும் அதிகாரிளிடம் இணக்கமான சூழலை முதல்வர் ஏற்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இப்படித்தான் ஒரு திட்டத்தை அறிவித்துவிட்டு பின்னர் வாபஸ் பெறவேண்டும். இதனால் ஆட்சிக்குத்தான் ஆபத்து என்பதை முதல்வர் உணரவேண்டும்’’ என்றனர்.
‘ஜனநாயகன்’ படத்தில் சாட்டைய சுழற்றிய விஜய், கட்சி, ஆட்சி நிர்வாகத்திலும் சாட்டையை சுழற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது!
