முந்தை தி.மு.க. அரசு கூட்டணிக் கட்சிகளை மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ‘எதிர்க்கட்சிகளுக்கு இப்படியொரு மரியாதையா?’ என வியந்து த.வெ.க. அரசை பாராட்டித் தள்ளியிருக்கிறார் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்!

காவிரியின் குறுக்கே கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் அனைத்துக் கட்சி கூட்டத்தையும் கூட்டுமாறு அவர் முதல்வர் விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் இன்றைய தினம் சென்னை தலைமைச் செயலகத்திற்கு அன்புமணி, சவுமியா அன்புமணி, செஞ்சி எம்எல்ஏ கணேஷ் குமார் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். அன்புமணி தலைமைச் செயலகத்திற்கு வருவதை அறிந்த அமைச்சர் ஆனந்த், வாசலுக்கே வந்து அன்புமணி உள்ளிட்டோரை வரவேற்று அழைத்து சென்றார். இதனால் அன்புமணி, “நாங்களே வந்திருப்போமே, எங்களை வரவேற்க நீங்கள் ஏன் வந்தீர்கள்” என கேட்டார்.

இதையடுத்து அமைச்சர் ஆனந்தின் அறைக்குச் சென்ற அன்புமணிக்கும் சவுமியாவுக்கும் ஆனந்த் பொன்னாடை போர்த்தினார். அது போல் அன்புமணியும் ஆனந்திற்கு பொன்னாடை போர்த்தினார். மேலும் மேகதாது அணைக்கு எதிராக தலைமைச் செயலகத்தில் ஒரு ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது சவுமியாவுடன் பேசிக் கொண்டிருந்த போது திடீரென அன்புமணிக்கு வலது புறம் திரும்பி பார்த்து, திடுக்கிட்டார்.

அமைச்சருக்கான நாற்காலியில் அமராமல் அன்புமணிக்கு பக்கத்தில் இருந்த நாற்காலியில் ஆனந்த் அமர்ந்ததால் பதறிய அன்புமணி, நீங்கள் அமைச்சர் சீட்டில் உட்காருங்கள் என்றார். ஆனால் அவரோ பரவாயில்லை என மறுத்தார்.

பிறகு, அன்புமணி, ‘‘நீங்கள் அமைச்சர் நாற்காலியில்தான் உட்கார வேண்டும்’’ என அன்பு கட்டளையிட்டதால் அவரும் அமர்ந்தார். பின்னர் நீர்வளத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் அன்புமணி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தியிருந்தனர். சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

அதன் பிறகு அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்த போது, ‘‘தமிழகத்தில் இருக்கும் நீர்த் திட்டங்கள் சம்பந்தமாக என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன தேவை, எது அவசரம் உள்ளிட்ட தொடர் திட்டங்களை பற்றி ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குவதாக நாங்களே நேரில் வந்துள்ளோம். இதை ஒரு மிகப் பெரிய மாற்றமாக நான் பார்க்கிறேன். 60 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு மாற்றம். எதிர்க்கட்சிகளை அழைத்து இப்படி மரியாதை கொடுத்து அவர்களோட யோசனைகள், ஆலோசனைகளை கேட்டு நடவடிக்கை எடுக்கிற வகையில் இந்த அரசு இருக்கிறது. அதற்கு நான் பாரட்டுகிறேன்’’ என அன்புமணி தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal