ஆளுநரின் செயல்பாடுகள் குறித்த எதிர்ப்பை முதலமைச்சர் விஜய் பேச வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

பிரபல தமிழ் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த வீரபாண்டியன், ‘‘50 நாட்களில் ஓர் ஆட்சியை மதிப்பிட்டு விட முடியாது என்றார். தவெகவுக்கு இன்னும் காலம் தேவை என்பதை வலியுறுத்திய வீரபாண்டியன், ஆட்சிக்கு நிலைத்தன்மையும் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

முதல்வர் விஜய் உட்பட அனைவரும் ஆட்சி நிர்வாகத்திற்கு புதியவர்கள் என்பதை விளக்கிய அவர், என்றாலும் அவர்கள் அறிவில் சிறந்தவர்கள் என்பதால் விரைவில் கற்றுக்கொள்வார்கள் அந்த பொறுப்பே அவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் என்றும் கூறினார்.

திமுக அளவுக்கு பாஜக எதிர்ப்பில் தவெக உறுதியாக இல்லை என்றும் வீரபாண்டியன் தெரிவித்தார். பாஜக எதிர்ப்பை தவெகவும் வெளிப்படுத்தினால் தான் தமிழகத்திற்கு நல்லது என்றும் அவர் கூறினார். பாஜக எதிர்ப்பை வலியுறுத்தித்தான் தவெக ஆட்சிக்கான ஆதரவுக் கடிதத்தில் கையெழுத்திட்டோம் என்றும் வீரபாண்டியன் கூறினார்.

மேலும், திமுக – அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்ததில் எந்த தவறும் இல்லை என கருத்து தெரிவித்த வீரபாண்டியன், ஜன நாயகத்தில் அது ஏற்புடையது தான் எனினும் பின்னணியில், பாஜக இருப்பதாக தாங்கள் கருதியதால் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று விளக்கம் அளித்தார். கால தாமதம் செய்து மக்கள் அதிகாரத்தில் ஆளுநர் அமர துடித்ததின் பின்னணியில் பாஜக தான் காய் நகர்த்தியதாக நாங்கள் திடமாக நம்பினோம் என்றும் வீரபாண்டியன் விளக்கினார்.

அதேபோல், போட்டி அரசாங்கம் நடத்தி, ஆட்சியில் தலையிடும் ஆளுநர் பதவி தேவையற்றது என வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்தார். ஆளுநரின் செயல்பாட்டிற்கு முதலமைச்சர் விஜய் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார் வீரபாண்டியன் வலியுறுத்தினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal