அ.தி.மு.க. & பா.ஜ.க. கூட்டணி அமைந்தது முதலே, ஆளும் தரப்பை இதை வைத்தே அ.தி.மு.க.வை ‘படுத்த படுக்கை’ ஆக ஆக்கிவிட வேண்டும் என கணக்குப் போட்டது. அதற்காக கையில் எடுத்த ஆயுதம்தான் ‘கூட்டணி ஆட்சி’!
அ.தி.மு.க.வினரே ‘கூட்டணி ஆட்சி பற்றி கண்டுகொள்ளாத நிலையில், தி.மு.க.வும், தி.மு.க. சார்ந்த ஊடகங்களும் ‘கூட்டணி ஆட்சி’ என்ற ஒற்றை வார்த்தையை வைத்து அ.தி.மு.க.வின் சோலியை 2026ல் முடித்துவிட வேண்டும் என கணக்குப்போட்டனர். ஆனால், இந்தக் கணக்கு எடப்பாடி பழனிசாமியிடம் பலிக்கவில்லை.
இது பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம்.
‘‘சார், தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார சுற்றுப்பயணத்தை மேட்டுப்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடந்த 7-ம் தேதி தொடங்கினார். தனது சுற்றுப்பயணத்தை தொடங்கியது முதலே ‘கூட்டணி ஆட்சி’ என்ற விஷயத்தை பொறுமையாக மறுத்துவந்த இபிஎஸ், முதற்கட்ட பயணம் முடியும் தருவாயில் ‘ஏமாளிகள் அல்ல’ என பொங்கியெழுந்திருக்கிறார்.
இதற்கு முக்கிய காரணமாக வடக்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் தனக்கு கிடைத்த வரவேற்பை பார்க்கிறார். ஏனென்றால் 2021 தேர்தலில் அதிமுக கூட்டணி பெரிய அடிவாங்கியது இந்த மண்டலங்களில்தான். 2021 தேர்தலில் வட தமிழகத்தில் உள்ள 69 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 10-ல்தான் வென்றது. மத்திய மண்டலத்தில் உள்ள 46 தொகுதிகளில் 6-ல்தான் அதிமுக அணி வென்றது. இப்படி 2021-ல் கடுமையான பின்னடைவை சந்தித்த வட, மத்திய தமிழக பகுதிகளில் இப்போது கிடைத்துள்ள பிரம்மாண்ட வரவேற்பு, இபிஎஸ்ஸுக்கு பெரிய பூஸ்டாக மாறியுள்ளது.
இது திமுகவுக்கு சொன்ன பதில் என்பதை விடவும், பாஜகவுக்கு இபிஎஸ் சொன்ன மெசேஜ் என்றே பார்க்கப்படுகிறது. இதன்பிறகாவது ‘கூட்டணி ஆட்சி’ என சொல்வதை பாஜக நிறுத்தும் என எதிர்பார்க்கிறது அதிமுக தரப்பு. தவிர, மேலும், தொகுதி வாரியாகவும் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களிடம் பேசி வருகிறார் அவர். அவர்களிடம் கிடைத்த ரெஸ்பான்சின் அடிப்படையில்தான் இப்போது பாஜகவுக்கு எதிராக இறங்கி அடித்து ஆட ஆரம்பித்துள்ளார்.
அதே நேரத்தில், ‘‘பாஜக யாரையும் ஏமாற்றுகிற கட்சி இல்லை, அதே நேரத்தில் ஏமாறக்கூடிய கட்சியும் இல்லை.வேண்டாத, அழையாத விருந்தாளியாக எங்கும் சென்றதில்லை’’ – என அண்ணாமலை கூறியிருக்கிறார். அண்ணாமலை தனது பதவி பறிப்புக்கு காரணம் அ.தி.மு.க.தான் என்பதை மனதில் வைத்துகொண்டுதான் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும், அ.தி.மு.க.விற்கு எதிரான மனநிலையிலும் இருக்கிறார். ஆனால், தமிழக பா.ஜ.க. தலைவர் அ.தி.மு.க.விற்கு ஆதரவான மனநிலையில்தான் இருக்கிறார். எனவே, எடப்பாடி பழனிசாமியில் முதல் தேர்தல் சுற்றுப் பயணத்தில் மக்கள் வெள்ளத்தைப் பார்க்கும்போது மன திருப்தியையும், 2026 நமக்கானது என்ற நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது.
எனவேதான், ‘எங்களை யாரும் ஏமாற்ற முடியாது’ என்றபோது, ‘கூட்டணி எல்லாம் அப்புறம்தான்’ என துணிச்சலோடு பேசியிருக்கிறார்’’ என்றனர்.
ஆக மொத்தத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த பயணம் மிகுந்த நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. ஏனவே யார் ஏமாற்றப் போகிறார்கள்? யார் ஏமாறப் போகிறார்கள் என்பது எடப்பாடி பழனிசாமியின் கையில்தான் இருக்கிறது.
