முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மா.செ.க்கள் மீது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பதாக தகவல்கள் கசிகிறது!

தமிழக சட்டமன்றத்தில் தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடு குறித்து எழுந்துள்ள விமரிசனங்களும், அதனால் கட்சித் தலைமைக்குள் உருவாகியுள்ள சலசலப்புகளும் தற்போது அரசியல் அரங்கில் பெரும் பேசுபொருளாகியுள்ளன. ஆளுங்கட்சியின் குற்றச்சாட்டுகளுக்குச் சளைக்காமல் பதிலடி கொடுப்பதோடு, சட்டமன்ற விவாதங்களில் மிகவும் ஆக்கபூர்வமான மற்றும் தரமான விமரிசனங்களை மட்டுமே முன்வைக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்.

ஆனால், தலைமை எவ்வளவோ அறிவுறுத்தல்களை வழங்கியும், சட்டமன்றத்தின் மாண்பைக் காக்கும் வகையில் விவாதங்களில் பங்கேற்பதற்குப் பதிலாகச் சில தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் பேச்சுகள் அவையைச் சிரிப்பலையில் ஆழ்த்தும் வகையிலும், சமூக வலைதளங்களில் கேலிக்குரிய ‘ட்ரோல் மெட்டீரியல்’களாக மாறுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக, சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது வசந்தம் கார்த்திகேயன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மற்றும் அமைச்சர் ரகுபதி போன்ற மூத்த மற்றும் முக்கியப் புள்ளிளைக் கொண்டவர்களின் சில கருத்துக்கள் மற்றும் பதில்கள் அவையில் சலசலப்பை ஏற்படுத்தியதுடன், ஆளுங்கட்சிக்கு சாதகமான விவாதக் களம் அமைத்துக் கொடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

மக்கள் பிரச்சனைகள் குறித்த தீவிரமான விவாதங்கள் மற்றும் துறை சார்ந்த ஆழமான விமரிசனங்களை முன்வைத்து ஆளுங்கட்சியின் பலத்தை நிரூபிக்க வேண்டிய நேரத்தில், தி.மு.க உறுப்பினர்களின் இந்தத் தளர்வான அணுகுமுறை கட்சித் தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. எதிர்க்கட்சிகளான பா.ம.க மற்றும் தேமுதிக கட்சி எம்.எல்.ஏ-க்கள் அரசாங்கத்தின் மீது வைக்கும் கிடுக்கிப்பிடி விமரிசனங்களுக்கும், மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் தொடர்பான கேள்விகளுக்கும் தி.மு.க தரப்பிலிருந்து உரிய மற்றும் கூர்மையான வாதங்கள் வராதது பலத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தமிழக சட்டமன்றத்தைப் பொறுத்தளவில் த.வெ.க.வுக்கு கேள்விக்கணைகளால் தி.மு.க. உறுப்பினர்கள் நெருக்கடியை கொடுக்காமல் காமெடியை ஏற்படுத்தியதுதான் ஸ்டாலினையும், உதயநிதியையும் கொதிப்படைய வைத்திருக்கிறதாம்.

இதற்கிடையே, 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் குழு ஒன்றை அமைத்தார். இந்தக் குழு தொகுதிவாரியாக கள ஆய்வு நடத்தி அளித்த பரிந்துரையின்படி, சரியாக செயல்படாத 10-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் நீக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ஒரு மாவட்டச் செயலாளர் வசம் அதிகபட்சம் 6 தொகுதிகள் வரை இருக்கும் நிலையில், 2 முதல் 3 சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என மாற்றி அமைத்து புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மாவட்டச் செயலாளர் பதவியில் உள்ள மூத்த நிர்வாகிகள் சிலரை மாநில பொறுப்புக்கு மாற்ற உள்ளதாகவும், மாவட்டச் செயலாளர் பதவிகளில் இளைஞர்கள், பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு மாநில அளவிலான பதவியும், கட்சியில் புதிதாக சேர்ந்த சிலருக்கு மாவட்டச் செயலாளர் பதவியும் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆக மொத்தத்தில் அறிவாலயத்தில் களையெடுக்கும் பணி ஆரம்பம் ஆகிவிட்டது என்கிறார்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal