சென்னையில் நடைபெற்ற மது விருந்தில் கலந்துகொண்ட இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் பெண் தோழி மற்றும் பெண் தோழியின் ஆண் நண்பர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் சென்னையில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வருகிறார். இவரது 27 வயதுடைய பெண் தோழியான பெரம்பூரைச் சேர்ந்த ஒருவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள லாட்ஜில் 2 அறைகளை பதிவு செய்துவிட்டு, மது அருந்த அழைத்துள்ளார். அதன் பேரில், வேலூர் பெண் கடந்த 27-ம் தேதி அந்த லாட்ஜூக்கு சென்று, பெண் தோழியுடன் மது அருந்தியுள்ளார்.
இந்நிலையில் அந்த பெண் தோழி, அவருக்கு தெரிந்த 2 ஆண் நண்பர்களை அறைக்கு வரவழைத்துள்ளார். 4 பேரும் ஒன்றாக மது அருந்தினர். பின்னர் அங்கேயே மது மயக்கத்தில் தூங்கிவிட்டனர். மறுநாள் காலை வேலூர் பெண் கண் விழித்து எழுந்து பார்த்தபோது, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்தார்.
இது தொடர்பாக ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து பெண் தோழி, அவரது ஆண் நண்பர் கொடுங்கையூரைச் சேர்ந்த மனாசே (29) ஆகிய இருவரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.