‘நமக்கு 2026ஐ விட 2029தான் மிக முக்கியம்’ என நயினார் நாகேந்திரன் பேசியிருப்பது பா.ஜ-.க.வினரை உற்சாகத்திலும், அ.தி.மு.க.வினரை அதிர்ச்சியிலும் ஆழ்த்தியிருக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் தமிழக பாஜ சார்பில் பூத் வலிமைப்படுத்தும் பயணம் மற்றும் மாநில பயிலரங்கம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் ஆளுநர் தமிழிசை, சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பாஜ மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, எச்.ராஜா மற்றும் பாஜவின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் வாக்குச்சாவடிகளில் முக்கிய நிர்வாகிகள் நேரடியாக சென்று வலிமைப்படுத்தும் வகையில் பல்வேறு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டது.
பாஜக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்ய அறிவுரை வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், ‘‘நம்முடைய நோக்கம் 2026 சட்டமன்ற தேர்தல் அல்ல 2029ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் தான். அதுதான் நமக்கு முக்கியம். சென்னையில் கொக்கைன் சாதாரணமாக கிடைக்கிறது. 2026ல் நிச்சயமாக ஆட்சி மாற்றம் வரும் அதற்கான வேலைகளை உள்துறை அமைச்சர் பார்த்துக் கொள்வார். 2026 சட்டமன்றத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமைக்கும்’’ என்றார்.
எடப்பாடி பழனிசாமி எப்படி 2024ஐ விட 2026 தான் முக்கியம் என கருதி பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேறினார். தற்போது, எடப்பாடி பழனிசாமிக்கு 2026 முக்கியம். காரணம், இம்முறை வெற்றி பெறாவிட்டால், அ.தி.மு.க.வின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும். அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கமே இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும். காரணம், த.வெ.க. போன்ற கட்சிகள் வலுவாக காலூன்றி விடும்.
இந்த நிலையில் 2026 நமக்கு முக்கியமில்லை என்று நயினார் பேசியிருப்பதுதான் அ.தி.மு.க. தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. காரணம், தமிழகத்தைப் பொறுத்தளவில் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் வெற்றி பெறுவது கடினம். காரணம், பா.ஜ.க.எதிர்ப்பைச் சொல்லித்தான் தி.மு.க. தொடர் வெற்றிகளை பெற்றுவருகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் 2026 பா.ஜ.க.வுக்கு முக்கியமில்லை என்ற பட்சத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியம். அப்படியிருக்கையில் அவரை வலுக்கட்டாயமாக கூட்டணியில் சேர்த்திருப்பதுதான் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. தமிழகத்தில் அ.தி.மு.க.வை இருக்கும் இடம் தெரியாமல் ஆக்கிவிட்டு, பா.ஜ.க. காலூன்ற நினைக்கிறதா? என பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.