துரைமுருகனிடம் உள்ள பதவியை பறிக்கும் விவகாரத்தை தற்போதைக்கு தள்ளிப் போட ஸ்டாலின் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் என்னும் தாய்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் பல்வேறு சுவாரஸியமூட்டும் நிகழ்வுகள் அரங்கேறின. குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், ‘‘பள்ளியில் லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட்ஸை சமாளிப்பது கஷ்டம். அதுபோல திமுகவில் நிறைய லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட்ஸ் இருக்கிறார்கள். அதுவும் சாதாரணமானவர்கள் இல்லை.

எல்லாரும் ரேங்க் ஹோல்டர்கள். தங்களின் இடத்தை விட்டுப் போகாமல் இருப்பவர்கள். இவர்களை எல்லாம் கலைஞர் கருணாநிதி எப்படி தான் சமாளித்தாரோ தெரியவில்லை. குறிப்பாக துரைமுருகன் என்ற ஒருவர் இருக்கிறார். அவர் கலைஞர் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டியவர். அவரிடம் ஒரு விஷயத்தை செய்து விட்டு சென்று அண்ணே எப்படி இருக்கிறது என்று கேட்டால் அப்படியா சந்தோஷம் என்பார். அவர் நல்லா இருக்கிறது என்கிறாரா, ஏண்டா இப்படியெல்லாம் பண்றீங்கனு சொல்றாரா எனப் புரியாது. இவர்களை எல்லாம் வைத்து சமாளிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஹாட்ஸ் ஆஃப்’’ என்று கூறினார்.

இது அரங்கு முழுவதும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது. அதாவது திமுகவில் மூத்தவர்கள் வழிவிட வேண்டும். இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் குறிப்பிட்டிருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில்தான், திமுக பொதுச் செயலாளராக உள்ள துரைமுருகன் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக டி.ஆர். பாலுவோ அல்லது ஆ. ராசாவோ நியமிக்கப்படலாம் என்றும், திமுக துணைப் பொதுச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படலாம் என்றும் பேச்சு அடிபட்டு வருகிறது.

துரைமுருகனுக்கு அவ்வப்போது உடல்நலக் குறைவு ஏற்படுவதாகவும், அடிக்கடி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் கட்சிப் பணிகளில் சுணக்கம் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. மேலும், திமுகவில் 70 வயதைக் கடந்தவர்களே பல பத்தாண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருவதால், அவர்களை மாற்றிவிட்டு கட்சிக்கு இளரத்தம் பாய்ச்ச வேண்டும் என திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கருதுவதாகவும் பேசப்பட்டது.

இதற்கு முக்கிய காரணம் – கட்சிப் பதவி, பிரதிநிதித்துவம் உள்ளிட்டவைகளை இந்த சீனியர்களும், அவர்களது வாரிசுகளுமே பங்கிட்டுக் கொள்வதால், மற்ற நிர்வாகிகள் ஏமாற்றத்துடன் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அதிருப்தி அடையாமல் இருப்பதற்காகவும், அவர்களது நியாயமான காத்திருப்புக்கு ஒரு பலனை அளிப்பதற்காகவும் கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகளை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமிக்க முடிவு செய்திருந்தார்.

இந்தத் திட்டத்தை முதலில் துரைமுருகனிடமிருந்தே தொடங்கலாம் என ஸ்டாலின் யோசித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் துரைமுருகன் தன்னிடம் உள்ள பொதுச் செயலாளர் பதவியை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. ‘உயிர் மூச்சு இருக்கும் வரை பதவியை விட்டுக்கொடுக்கமாட்டேன்’ என்று துரைமுருகன் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொன்னதாக தகவல்.

‘‘துரைமுருகன் எவ்வளவு பெரிய சீனியர். அவர் வேலூர் மாவட்டத்தில் சக்தி வாய்ந்தவர். அவரை எப்படி நீக்குவார்? அனுபவசாலிகள் தலைமைப் பதவியில் இருந்தால்தானே கட்சிக்கு வளர்ச்சி?’’ என்ற முணுமுணுப்பும் எழாமல் இல்லை.

‘‘பிறகு ஸ்டாலின் எப்படிப் புது ரத்தத்தைப் பாய்ச்சுவார்? துரைமுருகனுக்கு உடல்நிலை சரியில்லை என்பது உண்மைதான். பொதுவாக இது போன்ற நிர்வாகிகள் மாற்றம் என்பது பொதுக்குழுவில் வைத்துதான் நடக்கும். திமுக துணைப் பொதுச்செயலாளராக கனிமொழியைக்கூட கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுக்குழுவைக் கூட்டித்தான் அறிவித்தார்கள். அப்படி துரைமுருகன் மற்றவர்களுக்கு கொடுத்தால் என்ன?’’ என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

இந்த நிலையில்தான் துரைமுருகன் விவகாரத்தை கொஞ்நாளைக்கு தள்ளிப் போடலாம் என ஸ்டாலின் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal