தமிழகத்தைப் பொறுத்தளவில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகிவருகின்றனர். கட்சி நிர்வாகிகளோ, ‘எப்படியாவது சீட் வாங்கிவிடவேண்டும்’ என காய் நகர்த்தி வருகின்றனர். ஆனால், பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணிகளில் ஈடுபட்டுவரும் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தென் தமிழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை ஜூலை 5ம் தேதி நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறார்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள ஃபிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில், ‘கிவ் லைஃப்’ அறக்கட்டளை, ‘தி ரைஸ்’ மற்றும் ஆலடி அருணா லிபரல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 5ம் தேதி நடக்கிறது.

இது தொடர்பாக வீடியோ பதிவில் பேசிய முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, ‘‘அனைவருக்கும் வணக்கம் கடந்த இரண்டு, மூன்று நாட்களாக கழகத் தோழர்கள், பொதுமக்கள் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் இருந்து வருகின்ற ஜூலை 5ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறதாமே? நீங்களும் ஸ்பான்சர் செய்கிறீர்களாமே? உண்மையா எனக் கேட்டார்கள்.

உண்மைதான்… தயவு செய்து எல்லோரும் வாருங்கள். இந்த வேலைவாய்ப்பு முகாமில் நீங்கள் கலந்துகொள்வதற்கு முன்பு ஒரு சில வரைமுறைகள் உள்ளது. அடுத்தடுத்து வரக்கூடிய ‘ஸ்லைஸில்’ காட்டியிருக்கிறோம். எப்படி முன் பதிவு செய்யவேண்டும்? யாரை அணுகவேண்டும்? என்று அதில் சொல்லியிருக்கிறோம்.

எல்லோரும் வந்து இந்த அரிய வாய்ப்பினை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற கழகத் தலைவர் அவர்கள் வழியில் என்றென்றும் மக்கள் பணியில் பூங்கோதை ஆலடி அருணா’’ என பதிவிட்டிருக்கிறார்.

இந்த வேலைவாய்ப்பு முகாம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. 150க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. இது வரை 13,500க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் முன்பதிவு செய்ய, (91500 60036, 75300 88293) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

குறிப்பாக ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதிகளை ஆலடி அருணா கலை அறிவியல் கல்லூரி ஏற்பாடு செய்திருக்கிறது. பேருந்துக்கு முன்பதிவு செய்ய (97893 08303, 94865 11103, 73737 87333) இந்த எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி ஆருணாவின் வேலைவாப்பு முகாம் பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம். ‘‘சார், இன்றைக்கு இளம்பட்டாளங்களை குறிவைத்து நடிகர் விஜய் அரசியல் களத்தில் இறங்கியிருக்கிறார். படிக்கும் இளைஞர்களும், படித்த இளைஞர்களும் விஜய் மீது ஒரு ஈர்ப்பில் இருக்கின்றனர். இந்த நிலையில் இப்படியொரு மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் என்பது, தி.மு.க. பக்கம் படித்த இளைஞர்களின் பார்வையை திருப்பும் என்பதில் சந்தேகம் இல்லை’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal