மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போது, அ.தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பத்திரிகையாளர்களிடம் வாய் திறக்கமாட்டார்கள். காரணம், உளறினால் பதவி பறிபோய்விடும்.
அ.தி.மு.க. சார்பில் அப்போது நடக்கும் பொதுக்கூட்டங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்களில் மட்டும் தி.மு.க.வை கடுமையாக விமர்சிப்பார்கள். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு நிலைமை மாறிவிட்டது.
மதுரையில் ஒரு அமைச்சர் ‘தெர்மாகோல்’ புகழ்பெற்றார். அவர் என்னப் பேசுகிறோம் என்று தெரியாமலேயே பேசுவார். அதே போல் திண்டுக்கல் சீனிவாசனும் அடிக்களி உளறிவந்தார்.
‘‘2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 525 வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி ஏமாற்றிவிட்டார்’’என் அதிமுகவைச் சேர்ந்த பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதிமுக தலைமையிலான கூட்டணி அமைந்துவிட்டது; அதை வெளியே சொன்னால் அந்த கட்சிகளுக்கு ‘பெட்டி’யை கொடுத்து மாற்றிவிடுவார்கள் என்றும் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ‘‘நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 64 வாக்குறுதிகளை கொடுத்தது. ஆனால் தூத்துக்குடி எம்பி கனிமொழி, இந்த தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதுவுமே பேசவில்லை.
இதேபோல 2021 தேர்தலில் 525 வாக்குறுதிகளை தந்த எடப்பாடி (பழனிசாமி) அதை நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டார். அதேபோல நாடாளுமன்ற தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை இன்று வரை நிறைவேற்றாமல் இருக்கிறார்’’ என்றார். திமுகவை விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு சொந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏமாற்றிவிட்டார் என அதிமுக பொருளாளர் சீனிவாசன் பேசியது அக்கட்சியினரை கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஏற்கனவே திண்டுக்கல் பொதுக் கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், மு.க.ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்குவோம் என பேசி அதிமுகவினருக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதேபோல அதிமுக கூட்டணிக்கு வருகிறவர்கள் எல்லாம் ரூ.100 கோடி கேட்பதாக கூறி சலசலப்பை ஏற்படுத்தி இருந்தார். அதேபோல திமுக ஆட்சி அமைவதற்காக ஓட்டுப் போட்டதற்காக அரசு ஊழியர்களை, அட கொலைகார பாவிகளா என விமர்சித்து அதிருப்தியை உருவாக்கிக் கொண்டார் சீனிவாசன்.
இத்தகைய தொடர் பேச்சுகளால், திண்டுக்கல் சீனிவாசனை நேரில் அழைத்த எடப்பாடி பழனிசாமி, ‘‘- எங்கே போய் பேசினாலும் பார்த்து பேசுங்க அண்ணே.. கூட்டணிக்கு வரும் கட்சிகளையும் வரவிடாமல் திருப்பி அனுப்பிவிடவேண்டாம்’’ என கேட்டுக்கொண்ட நிலையில்தான், திண்டுக்கல் சீனிவாசன் மீண்டும் திருவாய் மலர்ந்திருக்கிறார்!
அ.தி.மு.க.விற்கு இவர்தான் ‘அனூகூல சத்ரு’வோ…?