தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொகுதியில் நிர்வாக முறைகேடுகள் நடப்பதாக பா.ஜ.க. பகீர் குற்றச்சாட்டை கிளப்பியிருக்கிறது.
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி, பெரியார் நகர் அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால், தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்த 1-ம் வகுப்பு மாணவி பாவனா குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகையை முதல்வர் ஸ்டாலின் தாயுள்ளத்தோடு வழங்க வேண்டும்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பெரியார் நகரில், பெரியார் பெயர் வைப்பதால், பெருமை பொங்க கூறுவதால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. மனிதநேயத்துடன் மக்களுக்கு சேவை செய்வதை உறுதி செய்வதுதான் முதல்வரின் கடமை. அதுவே தமிழக முதல்வருக்கு பெருமை. மிகப்பெரிய திட்டங்களால், கட்டிடங்களால், நவீன வசதிகளால், வெற்று விளம்பரங்களால், அலங்கார வார்த்தைகளால் எந்தவித மாற்றங்கள் ஏற்படுத்த முடியாது.
“பெருமைக்கு எருமையை மேய்ப்பதால் எந்தவித பயனும் இல்லை” என்பது கிராமத்து பழமொழி. எனவே முதல்வர், அமைச்சர்களுக்கும், அனைத்து துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும், மனிதநேயத்துடன் மக்கள் நலனை, காக்கும் வகையில் தமிழக முழுவதும் செயல்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் நிர்வாக சீர்கேடுகளுக்கு இடம் கொடுக்காமல் அரசு ஊழியர்கள் பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
அரசாங்க சட்ட விதிகளின்படி மக்கள் நலன் பாதுகாக்கப்பட்டு, மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் திட்டங்கள், உதவிகள் முறையாக போய் சேர்கிறதா என்று ஆய்வு செய்து மக்களை காக்க வேண்டியது முதல்வரின் கடமை என்பதை உணர்ந்து உரிய முறையில் அதற்கான நடவடிக்கைகளை தமிழக முழுக்க முதல்வர் ஸ்டாலின் எடுக்க வேண்டும்.
முதற்கட்டமாக, முன்மாதிரியாக கொளத்தூர் தன்னை மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற வைத்த கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் இதுவரை செயல்படுத்தப்பட்ட அரசு திட்டங்களுக்கு முறையாக பணம் செலவிடப்பட்டுள்ளதா? ஊழல் நடந்துள்ளதா? திட்டங்களின் மூலம் மக்கள் பயனடைகிறார்களா? திட்டங்களை மேலும் மேம்படுத்த வேண்டுமா? என்பதை ஆய்வு செய்து அதே விதமாக தமிழக முழுக்க அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரு பகுப்பாய்வு செய்வதன் மூலம் தான் தமிழக மக்களின் நலனை காக்க முடியும் என்பதை உணர்ந்து அதற்கான முயற்சியில் முதல்வர் ஈடுபட வேண்டும் என்று கொளத்தூர் சட்டமன்ற தொகுதியின் வாக்காளராக நான் கேட்டுக்கொள்கிறேன்.
பெரியார் நகர் மருத்துவமனையில் கடந்த வாரம் காலில் அடிபட்டதால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, முறையற்ற, தவறான சிகிச்சை காரணமாக ஒன்றாம் வகுப்பு மாணவி பாவனா உயிர் இறந்ததாக பெற்றோர்களால் குற்றம் சாட்டப்பட்டது.
குழந்தை பாவனாவிற்கு உடனடியாக முதல் உதவி சிகிச்சை அளித்து, நோயின் தன்மை குறித்து முதல்வர் பெருமை பேசும் பெரியார் நகர் மருத்துவமனை நிர்வாகம் முழுமையாக உடனே ஆய்வு செய்து பெரியார் நகர் மருத்துவமனையில் இருந்து, ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவர்கள் உரிய கவனம் கொடுத்து சென்னை அரசு பொது மருத்துவமனை அல்லது குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி இருந்தால் அந்த குழந்தையின் உயிர் காப்பாற்ற பட்டு இருக்கும் என்று பெற்றோர்கள் கருத்து தெரிவித்தனர்.
இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உரிய முறையில் ஒரு மருத்துவ குழுவை நியமித்து விசாரணை செய்து, ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தை பாவனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த பொழுது மருத்துவம் பார்த்த மருத்துவ குழுவை முழுமையாக விசாரித்து, குழந்தையின் இறப்புக்கு டாக்டர்களின் அலட்சியம் தான் காரணம் என்று நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.
பெற்றோர்களின் குற்றச்சாட்டின் படி பெரியாநகர் அரசு மருத்துவமனை அலட்சியம் தான் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கிறது என்பதை முதல்வர் முதல் கட்டமாக உணர்ந்து கொண்டு தாயுள்ள தோடு அந்த குழந்தை பாவனாவின் குடும்பத்துக்கு உரிய இழப்புத் தொகையை வழங்க வேண்டும்.
முதல்வரின் சட்டமன்ற தொகுதியில் உள்ள பெரியார் நகர் மருத்துவமனை உட்பட ஆறு வட்டங்களிலும் உள்ள ஆரம்ப சுகாதார மையம், மகப்பேறு மருத்துவம் மையங்களில் மக்கள் நலனை பேணிக்காக்கும் வகையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் முறையாக பரிசோதிக்கப்பட்டு அன்புடன் ஆதரவுடன் மரியாதையாக நடத்தப்பட்டு அவர்களுக்கு சரியான சிகிச்சை முறை அளிக்கப்படுகிறதா என்பதை முதல்வர் ஆய்வு செய்ய வேண்டும்.
முதல்வரின் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பல நூறு கோடி ரூபாய் செலவில் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. கட்டடங்கள் கட்டப்படுகின்றன. முதல்வர் தொகுதியில் பல்வேறு மக்கள் நலன்கள் நிகழ்ச்சிகள் நடப்பதாக விளம்பரப்படுத்தப்படுகிறது. ஆனால் தொகுதி முழுவதும் ஒட்டு மொத்தமாக நிர்வாக சீர்கேடுகள் மலிந்து காணப்படுகிறது என்பதை உணர்ந்து அதை நீக்குவதற்கான முயற்சிகளை ஒரு சட்டமன்ற உறுப்பினராக முதல்வர் ஈடுபட வேண்டும்’’ என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறார் ஏ.என்.எ-ஸ்.பிரசாத்!