சமீபத்தில் வி.சி.க.வில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா த.வெ.க.வில் இணைந்த பிறகு திருமாவளவனை சந்தித்தது பேசுபொருளானது. இந்த நிலையில்தான் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு கொடுத்திருப்பதை திருமா வரவேற்றிருப்பதுதான் தி.மு.க.வை திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி அரசியலில் நுழைந்துள்ளார். 2026ல் தமிழகத்தில் நடக்கும் சட்டசபை தேர்தலில் அவரது கட்சி களமிறங்க உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் 13 மாதங்கள் மட்டுமே உள்ளது.
இதனால் நடிகர் விஜய், தகெவில் நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட பணிகளை விரைவாக மேற்கொண்டு வருகிறார். மேலும் தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் இறங்கும் முன்பு அதற்கான பணிகளை அவர் திட்டமிட்டு வருகிறார். இதற்காக பிரசாந்த் கிஷோர், ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்ட தேர்தல் வியூக வகுப்பாளர்களுடன் சேர்ந்து அவர் ஆலோசித்து வருகிறார். விரைவில் நடிகர் விஜய் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின்போது அவருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் ஆடியோக்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் தான் தற்போது நடிகர் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பை மத்திய மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கி உள்ளது. இதன்மூலம் நடிகர் விஜயின் பாதுகாப்புக்காக 11 பேர் பணியில் ஈடுபட உள்ளனர். இதில் 2- 4 காமாண்டோக்களும், மற்றவர்கள் போலீஸ்காரர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் 24 மணிநேரம் சுழற்சி முறையில் விஜயின் பாதுகாப்பை உறுதி செய்வார்கள். இந்நிலையில் தான் நடிகர் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு இருப்பது என்பது விவாதத்தை கிளப்பி உள்ளது.
அதாவது நடிகர் விஜயை பாஜக கூட்டணிக்குள் இழுக்கும் முனைப்பில் இந்த பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளதாக பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் கூறி வருகின்றனர். அதேவேளையில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், நாட்டில் முக்கியமான நபர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது மத்திய உள்துறை அமைச்சகம் இப்படியான பாதுகாப்பு வசதிகளை வழங்குவது வழக்கம் தான். இதில் அரசியல் உள்நோக்கம் இல்லை என்று கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தான் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனிடம் இன்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு தொல் திருமாவளவன் பதிலளித்து கூறியதாவது: ‘‘விஜய் கடிதம் எழுதி தனக்கு பாதுகாப்பு கோரினாரா? என்பது தெரியவில்லை. அவருடைய வேண்டுகோள் இல்லாமலேயே மத்திய அரசு அல்லது மத்திய உள்துறை அமைச்சகம் நல்லெண்ணத்தின் அடிப்படையில் இந்த பாதுகாப்பை வழங்கி இருக்குமேயானால் அதை வரவேற்க கடமைபட்டு இருக்கிறோம். ஆனால் இதிலும் ஒரு அரசியல் உள்ளதாக பொதுவெளியில் விவாதங்கள் எழுந்துள்ளன. எப்படி இருந்தாலும் அவரது பாதுகாப்பு முதன்மையானது. அதனை வரவேற்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.
தி.மு.க. கூட்டணியில் திருமா நீடிப்பாரா? என்ற சந்தேகம் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், விஜய்க்கு கொடுத்த பாதுகாப்பை திருமா வரவேற்றிருப்பது பல்வேறு வியூகங்களை எழுப்பியிருக்கிறது.