‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த விஜய் முதல் அரசியல் மாநாட்டிற்கு இடம் தேர்வு செய்ததில் எழுந்த சிக்கலைப் போல், பொதுக்குழுவிற்கும் மண்டபம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. ஜனவரி கடைசி வாரத்தில் தவெகவுக்கான மாவட்டச் செயலாளர்கள் நியமனம் 5 கட்டங்களாக நடைபெற்றது. இதுவரை 95 மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பான ஆலோசனை நடந்து வருகிறது.
இதனிடையே தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி ஒரு அரசியல் கட்சி சார்பாக ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட்டமும், 2 முறை செயற்குழு கூட்டமும் நடத்தப்படும். இந்த நிலையில் தவெக சார்பாக 2026ஆம் ஆண்டுக்கான செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை பிப்.26ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை தவெக நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். எப்படி மாநாட்டிற்கு இடம் கிடைக்காமல் தவெகவுக்கு சிக்கல் எழுந்ததோ, அதேபோல் பொதுக்குழு கூட்டம் நடத்தவும் சிக்கல் எழுந்துள்ளது.
ஏற்கனவே சென்னையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த மைதானத்தில் குறிப்பிட்ட நாளில் மற்றொரு நிகழ்ச்சிக்கு ஒப்புதல் கொடுத்துள்ளதால், தவெகவுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதன்பின் தவெக சார்பாக பள்ளி மாணவர்களுக்கான பரிசு விழா நிகழ்ச்சி நடந்த திருமண மண்டபத்திலேயே பொதுக்குழுவை நடத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால் இம்முறை திருமண மண்டபத்தில் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு நடத்தினர்.
தற்போது அந்த நட்சத்திர விடுதி நிர்வாகம் தரப்பிலும் இதுவரை இறுதி முடிவை தெரிவிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தேதியை முடிவு செய்துவிட்டு இடத்தை தேர்வு செய்ய முயற்சிப்பதால், இந்த சிக்கல் எழுந்துள்ளதாக அக்கட்சியினர் கூறி வருகின்றனர். இருந்தாலும் 3 இடங்களில் தொடர்ச்சியாக அனுமதி மறுக்கப்பட்டிருப்பது அக்கட்சியினர் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுக்குழு மற்றும் செயற்குழு நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் தவெக சார்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. அதேபோல் பொதுக்குழு கூட்டத்திற்கு பின் அக்கட்சியின் தலைவர் விஜய் அடுத்த சில வாரங்களில் மாவட்ட வாரியாக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ள நிலையில், இடம் கிடைக்காமல் இருப்பதன் பின்னணியில் மாநில அரசு இருக்கிறதோ என சந்தேகிக்கின்றனர் த.வெ.க.வினர்.