ருச்சி ஸ்ரீரங்கம் பெட்டவாய்த்தலை பகுதியில் செயல்பட்ட தவெக தேர்தல் அலுவலகம் மீது ஏப்ரல் 30 நள்ளிரவு மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். பேனர்கள் கத்தியால் கிழிக்கப்பட்டு அலுவலகம் தீவைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. வேட்பாளர் ரமேஷ் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், பனியன் அணிந்த இருவர் இருசக்கர வாகனத்தில் வந்து தீ வைப்பு செய்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பெட்டவாய்த்தலை பகுதியில், தவெக தேர்தல் அலுவலகம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த சூழலில் தான், ஏப்ரல் 30ஆம் தேதி நள்ளிரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், தேர்தல் அலுவலகத்தில் உள்ள பேனர்களை கத்தியால் கிழித்தும், அலுவலத்தை தீயிட்டு கொளுத்தியிருந்தனர். ஸ்ரீரங்கம் தவெக வேட்பாளர் ரமேஷ், இந்த சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டிய நிலையில், அந்த பகுதி தவெக ஒன்றிய செயலாளர் தலைமையில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்த நிலையில் தான், 2 பேர் அலுவலகத்தை தீயிட்டு எரித்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த சிசிடிவி காட்சிகளில், தமிழக வெற்றி கழகம் அலுவலகம் அருகில் பனியன் அணிந்த இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து வாகனத்தை நிறுத்திவிட்டு, சிறிது நேரம் கழித்து மீண்டும் வாகனத்தை எடுத்துச் செல்வது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன. இந்தசூழலில் தான், இருசக்கர வாகனத்தில் வந்தது யார் என்பது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல, அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என ஒரு சில கருத்துக் கணிப்புகளும், தவெகவுக்கு ஒரு சில கருத்துக் கணிப்புகளும் சாதகமாக வந்துள்ளன. எனினும், தமிழ்நாட்டை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார்? என்பது நாளை மறுநாள் தெரியவரும். முதன்முறையாக தேர்தலை சந்தித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே தவெக மற்றும் திமுக இடையே தான் போட்டி எனக் கூறிவந்த வேளையில், வாக்குப்பதிவுக்கு பிறகு, அது பெரும்பாலான இடங்களில் எதிரொலித்திருப்பதாக பார்க்கப்படுகிறது. வாக்குப்பதிவு நாளின் போது கூட, பெரும்பாலான இடங்களில் தவெக மற்றும் திமுகவினர் மோதல் ஏற்பட்டிருந்தது.
