மதுரை மேற்கு சட்டப்பேரவை தொகுதியை அமைச்சர் பி.மூர்த்தியிடம் திமுக தலைமை ஒப்படைத்துள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் தொடர் வெற்றியை தட்டிப் பறிக்கவே இந்த ‘செக்’ என திமுவினர் தெரிவித்துள்ளனர். திமுகவில் பல்வேறு மாவட்ட செயலாளர்கள் நேற்று முன்தினம் மாற்றப்பட்டுள்ளனர்.
பலரின் அதிகார எல்லையும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால் மதுரையில் மட்டும் 4 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என அறிவிக்கப்பட்டுள்ளது திமுகவினரிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை புறநகரில் மதுரை கிழக்கு, மேலூர், சோழவந்தான் ஆகிய 3 தொகுதிகளை கைவசம் வைத்திருந்த பி.மூர்த்தியிடம் மாநகரிலுள்ள மதுரை மேற்கு தொகுதி கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகரிலுள்ள 4 தொகுதிகளில் இரண்டை பிரித்து புதிய மாவட்ட செயலாளர் நியமிக்கப்படுவார் என கட்சியினர் எதிர்பார்த்தனர்.
ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் பி.மூர்த்தியிடம் மாநகரிலுள்ள மதுரை மேற்கு தொகுதி ஒப்படைக்கப்பட்டுள்ளது. கோ.தளபதியிடம் மதுரை மத்தி, வடக்கு, தெற்கு ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகள் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மாநகரைச் சேர்ந்த யாருக்கும் புதிய மாவட்டச் செயலாளர் பொறுப்பை வழங்க கட்சி தயாராக இல்லை என்பதை மூர்த்தியின் நியமனம் மூலம் கட்சி தலைமை தெளிவுபடுத்தியுள்ளது.
2021 சட்டப்பேரவை தேர்தலில் மாவட்டத்தில் உள்ள மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி என 5 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது. 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கியுள்ளன. இதில் தலா 5 தொகுதிகளை திமுகவும், அதிமுகவும் கைப்பற்றியுள்ளன. மீதி 5-ல் திமுக வென்றது. பல மாவட்டங்களில் திமுக பெரும்பான்மை தொகுதிகளில் வென்ற நிலையில் மதுரையில் 50 சதவீத வெற்றியையே பெற முடிந்தது.
இதை வரும் தேர்தலில் மாற்ற திமுக திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. இதன் தொடக்கமே மதுரை மேற்கு தொகுதி மூர்த்தியிடம் ஒப்படைப்பு. இத்தொகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடர்ந்து 2011, 2016, 2021 ஆகிய 3 சட்டப்பேரவை தேர்தல்களிலும் வென்றுள்ளார். 2 தேர்தலில் திமுக மாவட்ட செயலாளர் கோ.தளபதியை தோற்கடித்துள்ளார். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே பி.மூர்த்தியிடம் இத்தொகுதியின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திமுகவினர் தெரிவிக்கின்றனர்.
மதுரையில் நடந்த மாற்றம் குறித்து மூத்த உடன் பிறப்புக்கள் பேசும்போது, ‘‘‘சாதாரண நிகழ்ச்சியைக்கூட மாநாடு போல் நடத்தும் வல்லமை படைத்தவர் பி.மூர்த்தி என தமிழக முதல்வர் பலமுறை பாராட்டியுள்ளார். கடந்த 2 மக்களவை தொகுதிகளில் அதிகளவு வாக்குகளை பெற்று திமுக கூட்டணியின் வெற்றிக்கு மூர்த்தி உழைத்துள்ளார். சோழவந்தான் தொகுதியில் திமுகவை வெற்றி பெற வைத்துள்ளார். மேலூரையும் திமுகவுக்கு சாதகமாக மாற்றி வருகிறார். இதனால் மதுரை மேற்கு தொகுதியின் வெற்றிக்கு மாநகர் திமுக நிர்வாகிகளை நம்பி பலனில்லை.
அத்தொகுதியில் உள்ள குறிப்பிட்ட சதவீத முக்குலத்தோர் வாக்குகள் செல்லூர் ராஜூவின் வெற்றிக்கு கை கொடுக்கிறது. இதை மாற்ற வேண்டும். இதற்கேற்ப தொகுதியின் வேட்பாளர் தேர்வு முதல் நிர்வாகிகள் நியமனம் வரை பல மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. கட்சியினரை கட்டுக்கோப்புடன் செயல்பட வைக்க வேண்டும். கட்சியினர் மகிழும்படி செலவு செய்ய வேண்டும். இதை மூர்த்தி சரியாக செய்வார் என, அவரின் செயல்பாடுகளை வைத்து கட்சி தலைமை முழுமையாக நம்பி இத்தொகுதியை ஒப்படைத்துள்ளது. தலைமையின் நம்பிக்கையை மூர்த்தி சரியாக காப்பாற்றுவார்’’ என்றனர்.
தி.மு.க.வில் நடந்த மாற்றம் குறித்து அ.தி.மு.க.வில் உள்ள மூத்த ரத்தத்தின் ரத்தங்களோ, ‘‘ மூர்த்தி, செல்லூர் கே.ராஜூ இடையே அரசியல் ரீதியாக நேரடி வார்த்தை மோதல் இருந்ததில்லை. இருவரும் அட்ஜஸ் பண்ணிக்கொண்டு இருந்தார்கள். தி.மு.க. அமைச்சருடன் அ.தி.மு.க.வின் மாஜி ‘உறவில்’ இருப்பதை அ.தி.மு.க. தலைமை கண்டும் காணாமல் இருந்த நிலையில், தி.மு.க. தலைமை செல்லூர் ராஜுவுக்கு செக் வைத்துள்ளது’’ என்றனர்.