இரட்டை இலை சின்னம் தொடர்பான புகாரை பரிசீலித்து முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு மேலும் 8 வாரம் காலஅவகாசம் வழங்க வேண்டும் எனக்கோரி திண்டுக்கல் சூரியமூர்த்தி தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும்வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனு மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கை டிச.4 அன்று விசாரித்த நீதிபதிகள், அந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் விசாரணைக்கு அழைத்து, அவர்களின் கருத்துகளையும் கேட்டு 4 வார காலத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும், என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தனர்.
இந்த உத்தரவின் அடிப்படையில் இதுதொடர்பான எழுத்துப்பூர்வமான விளக்கத்தை டிச.19-க்குள்ளாக அளித்து, டிச.23-ம் தேதி டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி, புகார்தாரரான சூரியமூர்த்தி ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி தாக்கல் செய்திருந்த மற்றொரு மனுவில், ‘‘இந்த விவகாரம் தொடர்பாக பழனிசாமி கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்திருந்த பதில்மனு எனக்கு வழங்கப்படவில்லை. எனவே அதற்கேற்ப எனது கருத்துகளை தெரிவிக்க முடியவில்லை என்பதால் இரட்டை இலை சின்னம் தொடர்பான எனது புகார் மீது பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு மேலும் 8 வாரம் காலஅவகாசம் அளிக்க வேண்டும்’’ எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.