கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி வைக்க வேண்டும் என்றால், அண்ணாமலையை மாற்றவேண்டும் என அ.தி.மு.க. சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது, சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றால் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என மறைமுகமாக ‘மேலிடத்திற்கு’ எடப்பாடி தரப்பு கோரிக்கை வைத்து வருகிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்ததற்கு காரணம் அ.தி.மு.க.தான். எனவே, அ.தி.மு.க. சொல்வதை மேலிடம் கேட்கும். தவிர, பா.ஜ.க.விற்குள்ளேயே அண்ணாமலைக்கு எதிராக உள்ளடி வேலைகள் நடந்து வருகிறது. எனவே, விரைவில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மாற்றப்படுவார் என்று தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில்தான் தமிழக பா.ஜ.க.விற்கு அண்ணாமலை எந்தளவிற்கு அவசியம் என்பதை அரசியல் விமர்சகர் மருது அழகுராஜ், ‘வாழப்பாடி’யாரை காரணம் காட்டி தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இது பதிவல்ல கல்வெட்டு என்றே சொல்லும் அளவிற்கு அந்த பதிவு இருந்தது.
அதாவது, ‘‘#வாழப்பாடியார் ஒரு
வரலாற்று சாட்சி’’ என்ற தலைப்பில்,
‘‘1967-க்குப் பிறகு தமிழ் மண்ணில் புதையுண்டு கிடந்த தமிழக காங்கிரஸ் கட்சிக்கு 1991 -ல் 60 சட்டமன்ற உறுப்பினர்களையும் 28 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உருவாக்கிக் கொடுத்து தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுத்தவர் அன்றைய தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த மாவீரன் வாழப்பாடிராமமூர்த்தி..!
ஆனால் அந்த மகத்தான மதிநுட்பமிக்க தலைமையை ராஜீவ் காந்தியின் மறைவுக்கு பிறகு வந்த சீதாராம் கேசரியின் கூறுகெட்ட அகில இந்திய தலைமை நீக்கம் செய்துவிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக தங்கபாலுவை நியமனம் செய்து மீண்டும் தமிழ்நாடு காங்கிரஸை புதைகுழிக்கே கொண்டு சேர்த்தது..!
பிறகென்ன இன்றுவரை தமிழ்நாட்டில் காங்கிரஸ் திமுகவின் ஒட்டுத் திண்ணையில் உயிர் வாழ்ந்து வருவது தான் பரிதாபம்…
ஆக தரிசாக கிடந்த நிலத்தை விளைச்சலுக்கு ஏற்ப பண்படுத்தி முழுமையான மகசூலுக்கு முன்பு நிலத்தை தயார்படுத்திய உழவனை மாற்றுவதும் ஒரு கட்சிக்கு புத்துயிர் கொடுத்த தலைமையை மாற்றுவதும் உகந்தசெயல் அல்ல என்பதற்கு வாழப்பாடியாரின் வரலாறு ஒரு சாட்சியானது…
ஆம்… ஒரு தலைமையை மாற்றினால் தான் ஒரு கட்சி உருப்படும் என்பதற்கு வாழப்பாடியாரே சான்று..
ஒரு கட்சியின் தலைமையை மாற்றுவதால் முளைவிட்டுக் கிழம்பிய கட்சி முழுமை பெறும் முன்பே முடிந்து போகும் என்பதற்கும் வாழப்பாடியாரே சாட்சி…!’’ என பதிவிட்டிருக்கிறார்.
அதாவது, அண்ணாமலை தமிழக பா.ஜ.க. தலைவராக நியமனம் செய்யப்பட்ட பிறகுதான் இளைஞர்கள், இளைஞிகள் மத்தியில் அக்கட்சிக்கு தமிழகத்தில் வரவேற்பு கிடைத்தது. தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்து வரும் நிலையில், அதை முளையிலேயே கிள்ளியெறிய சிலர் சதிவலைப் பின்னுவதைத்தான் மருது அழகுராஜ் வாழப்பாடியாரை ஒப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.