‘மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஒரு ஆட்சி, மன்னராட்சி என்று விமர்சிப்பதை ஏற்க இயலாது. ஆதவ் அர்ஜூனா பேசியிருப்பது 100 விழுக்காடு தவறானது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்படும்’ என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, ‘ தமிழகத்தில் மன்னராட்சி நிலவுகிறது. 2026ல் அந்த மன்னராட்சி முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும்’ என பேசியது அரசியல் வட்டாரங்களில் புயலை கிளப்பியது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில், ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று கடந்த முறை, ஆதவ் அர்ஜூனா பேசிய போது, ‘விளக்கம் கேட்போம், நடவடிக்கை எடுப்போம்’ என கூறினீர்கள். ஆனால் எந்த வீதமான நடவடிக்கையும் எடுத்த மாதிரி இல்லை. இந்த முறை நடவடிக்கை எடுக்கப்படுமா என்று பலர் கூறி வருகின்றனர்’ என நிருபர் எழுப்பிய கேள்விக்கு திருமாவளவன் அளித்த பதில்:

கடந்த முறை உயர்நிலை குழு கூடி பேசினோம். அவர் சில விளக்கங்களை தந்தார். கூட்டணி குறித்து எந்த கருத்தையும் நான் சொல்லவில்லை. யாருடனும் நீங்க கூட்டணியை வைக்கலாம். அது தலைமை எடுக்கின்ற முடிவு. அதற்கு நான் கட்டுப்படுவேன். ஆனால், எளிய மக்களுக்கு அதிகாரம் வேண்டும் என்று நான் பேசுவதற்கு சுதந்திரம் இல்லையா? ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது ஏற்கனவே விடுதலை சிறுத்தைக் கட்சி பேசிய கருத்து தானே. அதை இப்போது நான் கூறியிருக்கிறேன் என ஆதவ் அர்ஜூனா விளக்கத்தை தந்தார்.

இந்த விளக்கத்தை, உயர்நிலை குழு ஏற்றுக்கொண்டது. தற்போது அவர் பேசியிருக்கும் கருத்து 100 விழுக்காடு தவறானது. மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஒரு ஆட்சி, மன்னராட்சி என்று விமர்சிப்பதை ஏற்க இயலாது. உயர்நிலை குழுவில் இது குறித்து நிச்சயம் கலந்து ஆலோசித்து, அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உரிய விளக்கத்தை கேட்போம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

த.வெ.க. தலைவர் விஜய் சம்பிரதாயத்திற்கு அறிக்கை… சம்பிரதாயத்திற்கு ட்விட்… சம்பிரதாயத்திற்கு மழை நீரில் புகைப்படம் என்றாரே… இதுவும் சம்பிரதாயத்திற்கு ஒரு நோட்டீஸாக இருக்குமோ..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal