அ.தி-.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அடிக்கடி சர்ச்சைகளில்டி சிக்கி வந்தார். சமீபகாலமாக அவரது பெயர் மோசடி புகார்களிலும் இடம்பிடிப்பதுதான் மதுரையில் அ.தி.மு.க.வை அதலபாதாளத்தல் தள்ளி வருவதாக வேதனையில் இருக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்!
மதுரையில் செல்லூர் ராஜூவின் உதவியாளர் எனக்கூறி, அரசு வேலை வாங்கித் தருவதாக 26லட்ச ரூபாய் மோசடி செய்ததாக மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருப்பதுதான் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
செல்லூர் ராஜூவின் மருமகனை காட்டி பணத்தை மோசடி செய்த நிலையில் 3 ஆண்டுகளாக பணத்தை திருப்பி தந்துவிடுவேன் எனக்கூறியதால் புகார் அளிக்கவில்லை எனவும், தற்போது தொடர்ந்து ஏமாற்றி வருவதால் புகார் மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மதுரை திருப்பரங்குன்றம் நிலையூரை சேர்ந்தவர் திருமுருகன். இவரிடம் மதுரை பழங்காநத்தம் டி.வி.எஸ் நகரை சேர்ந்த அ.தி.மு.க., வட்டச் செயலாளர் ராஜாராம் என்பவர் கடந்த 2021ம் ஆண்டு அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் உதவியாளர் எனக்கூறி அறிமுகமாகி உள்ளார். தொடர்ந்து செல்லூர் ராஜூ கூட்டுறவுத்துறை அமைச்சராக உள்ளதால் ரேஷன் கடையில் எடை அளவையாளர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
இதை நம்பி திருமுருகன் மற்றும் பலர் சேர்ந்து மொத்தம் 26 லட்ச ரூபாய் பணத்தை ராஜாராமிடம் கொடுத்ததாகவும், ஆனால் ராஜாராம் கூறியபடி எந்தவொரு அரசு வேலையும் வாங்கித்தராமல், தொடர்ந்து ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அமைச்சரின் உதவியாளர் எனக்கூறி பணத்தை மோசடி செய்த ராஜாராம் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டு பணத்தை மீட்டுதரக்கோரி மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் திருமுருகன் புகார் மனு அளித்துள்ளார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்…, ‘‘செல்லூர் ராஜூ கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த போது ராஜாராம் அமைச்சர் பெயரைசொல்லியும், மருமகனை காட்டி பணத்தை மோசடி செய்த நிலையில் 3 ஆண்டுகளாக பணத்தை திருப்பி தந்துவிடுவேன் எனக்கூறியதால் புகார் அளிக்கவில்லை எனவும், தற்போது தொடர்ந்து ஏமாற்றி வருவதால் புகார் மனு அளித்திருக்கிறோம்’’ தெரிவித்தார்.