மாநில திட்டக்குழுவின் அலுவல்சாரா துணைத் தலைவராக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், உறுப்பினராக தலைமைச்செயலர் நா.முருகானந்தமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசின் மாநில திட்டக்குழுவின் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளார். துணைத்தலைவராக பேராசிரியர் ஜெ.ஜெரஞ்சன், முழு நேர உறுப்பினராக ஆர்.சீனிவாசன், கூடுதல் முழு நேர உறுப்பினராக எம்.விஜயபாஸ்கர், பகுதிநேர உறுப்பினர்களாக சுல்தான் அகமது இஸ்மாயில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.தீனபந்து, ஆயிரம் விளக்கு எம்எல்ஏ என்.எழிலன், மல்லிகா சீனிவாசன், ஜெ.அமலோற்பவநாதன், ஜி.சிவராமன், நர்த்தகி நடராஜ் ஆகியோரும் உள்ளனர்.

அலுவல்சாரா உறுப்பினர்களாக திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறையின் செயலர் ரமேஷ் சந்த் மீனா, நிதித்துறை செயலர் டி.உதயசந்திரன் ஆகியோரும், உறுப்பினர் செயலராக ஐஎஃப்எஸ் அதிகாரி எஸ்.சுதாவும் உள்ளனர்.

இந்நிலையில், தமிழக அரசு மாநில திட்டக்குழுவுக்கு கூடுதலாக இருவரை நியமித்துள்ளது. அதாவது, திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறையின் அமைச்சர் என்ற முறையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அலுவல்சாரா துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, ஜெ.ஜெயரஞ்சன் செயல் துணைத்தலைவராகியுள்ளார். இதுதவிர, தமிழக தலைமைச்செயலர் நா.முருகானந்தம் அலுவல்சாரா உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal