அ.தி.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழுவிற்கு பின் கட்சி ரீதியாக மிகப்பெரிய அதிரடி மாற்றத்தை ஏற்படுத்த எடப்பாடி பழனிசாமி ஆயத்தமாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
அ.தி.மு.க., செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 15ம் தேதி காலை 10 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், கழக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.
‘‘கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்’’ எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நினைவு தினத்தின்போது ‘தி.மு.க.வின் குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்’ என எடப்பாடியார் தலைமையில் அ.தி.மு.க.வினர் சூளுரைத்தனர்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தி.மு.க. தலைமை உதயநிதி தலைமையின் கீழ் குழு அமைத்து தேர்தல் பணிகளில் விறுவிறுப்பாக களம் இறங்கிவிட்டது. ஆனால், அ.தி.மு.க. அந்தளவிற்கு தேர்தல் களத்தில் விறுவிறுப்பு காட்டாமல் சுணக்கமாக இருக்கிறதே? தவிர, அ.தி.மு.க.வில் மா.செ.க்கள் மாற்றம் மற்றும் இரண்டு தொகுதிக்கு ஒரு மா.செ. என்ற திட்டம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. கள ஆய்வுக் கூட்டத்திலும் தொடர்ச்சியாக களேபரம் வெடித்து வருகிறதே… என எடப்பாடிக்கு நெருக்கமான வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம்.
‘‘சார், பொதுக்குழு முடிந்த பிறகு கட்சியில் சரியாக பணியாற்றாத மா.செ.க்கள் மற்றும் இரண்டு தொகுதிக்கு ஒரு மா.செ. நியமனத்தை எடப்பாடி பழனிசாமி முடிக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருக்கிறார். அதாவது மதுரையில் தொடர்ச்சியாக சர்ச்சையிலும், முறைகேடு புகார்களிலும் சிக்கும் மா.செ.விற்கு எதிராக அம்மாவட்டத்தில் இருந்தே ஏராளமான புகார்கள் சென்றிருக்கின்றன.
அதே போல், சொந்தக் கட்சியின் பணத்தையே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பறிகொடுத்த திருச்சி மா.செ. ஒருவரின் பதவியையும் பறிக்க திட்டமிட்டிருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. சென்னை மாநகரிலும் மாற்றத்தைக் கொண்டுவர இருக்கிறாராம். ஏனென்றால், கட்சிக்கு விசுவாசமாக இல்லாத ஒரு சில மா.செ.க்களை வைத்துக்கொண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெற முடியாது என உளவுத்து¬¬ மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு தகவல் சென்றிருப்பதால், பொதுக்குழுவிற்குப் பிறகு நிச்சயம் மாற்றம் இருக்கும்’’ என்றார்கள்.