சமீத்தில்தான்மின்மாற்றிகள் வாங்கியதில் ரூ.400 கோடி அளவில் முறைகேடு நடந்ததாக அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுக்கப்பட்டது. இந்தப் புகாரின் பின்னணியில் தற்போதைய ‘மாண்புமிகு’ ஒருவர் இருப்பதாக தகவல்கள் கசிந்திருக்கிறது.

அமலாக்கத்துறை வழக்கில் ஒரு வருடத்திற்கும் மேல் சிறையில் இருந்து விட்டு கடந்த மாதம்தான் வெளியே வந்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அவர் வந்தவுடன், அவருக்காகவே காத்திருந்த மாதிரி முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த நாளே அமைச்சரவை மாற்றத்தை நடத்தினார்.

செந்தில் பாலாஜிக்கு மீன்டும் மின்சாரத்துறை வழங்கப்பட்டது. இதுதான் தி.மு.க.வில் உள்ள சீனியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும், அதிக அதிர்ச்சியடைந்தது அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் செல்வாக்காக இருந்த தற்போதைய கொங்கு மந்திக்குத்தான்.

காரணம், செந்தில் பாலாஜி சிறையில் இருந்தபோது, செந்தில் பாலாஜின் கோவை மாவட்டப் பொறுப்பை இந்த மாண்புமிகுதான் கவனித்து வந்தார். செந்தில் பாலாஜி வெளியே வந்து கோவையில் நடந்த அரசு நிகழ்ச்சியில், ‘கம்பேக் செந்தில் பாலாஜி’ என முதல்வர் வரவேற்ற ‘மஞ்சள் மாவட்ட’ மாண்புமிகுக்குப் பிடிக்கவில்லை. செந்தில் பாலாஜி வந்த பிறகு இவர் டம்மியாக்கப்பட்டதாக நினைத்துக்கொண்டு செந்தில் பாலாஜிக்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்த முயற்சித்தார்.

அதாவது, ‘எனது அரசியல் அனுபவம்தான் செந்தில் பாலாஜயின் வயதே இருக்கும்… அவருக்கு கீழ் நான் வேலை பார்க்க வேண்டுமா… அவர் சிறையில் இருக்கும்போது மட்டும் அவர் இடத்தை நான் நிரப்ப வேண்டும். இப்போது அவருக்கு கீழ் செயல்படவேண்டுமா?’ என தனக்கு நெருக்கமானவர்களிடம் அந்த மாண்புமிகு பேசி வருத்தப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில்தான் தனது பழைய பாசத்தை வைத்து, அ.தி.மு.க. நிர்வாகிகள் மூலம் செந்தில் பாலாஜி 2021ல் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு வாங்கி மின்மாற்றிகளில் நடந்த ஊழல் குறித்து பேசியதோடு, லஞ்ச ஒழிப்புத்துறையிலும் புகார் கொடுக்க வைத்திருக்கிறார் இந்த மாண்புமிகு!

இவருக்கு எதிராக யார் வந்தாலும், அவர்களுக்கு தடை போடுவதில் வல்லவர். சமீபத்தில்தான் கொங்கு பகுதியில் உள்ள ஒரு தொகுதி கூட்டணிக் கட்சிக்கு கொடுக்கப்படும் என தொகுதி பொறுப்பாளர்கள் மீட்டிங்கிலேயே அந்த மாண்புமிகு பேசினார். காரணம், அந்த தொகுதி தி.மு.க. போட்டியிட்டால், அங்கிருந்து நமக்கு எதிராக ஒருவர் கிளம்பிவிடுவார் என்றுதான் முளையிலேயே கிள்ளியிருக்கிறார் இந்த மாண்புமிகு..!

அடுத்தவர்களை முளையிலேயே கிள்ளி எறியும் மாண்புமிகுவின் உள்ளடி வேலைகளை முதல்வர் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் கொங்கு கோட்டையில் தி.மு.க.விற்கு பெரிய ஓட்டை விழுந்துவிடும்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal