சமீபத்தில் விழுப்புரத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளனர். இந்த நிலையில்தான் மதுரையில் மாவட்டச் செயலாளர் மாற்றம் எப்போது என்ற கேள்வியை மாற்றுக் கட்சியினர் எதிர்பார்த்து இருப்பதுதான் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.
அ.தி.மு.க.வினர்தானே மாவட்டச் செயலாளர் மாற்றத்தை எதிர்பார்த்திருக்க வேண்டும், மாற்றுக் கட்சியினர் எதற்காக அ.தி.மு.க.வில் நடக்கும் மாவட்டச் செயலாளர் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும் என மூத்த ரத்தத்தின் ரத்தங்களிடம் பேசினோம்.
‘‘சார், நேற்று தான் கூட்டணி குறித்து திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சைக் கருத்தை பேசி தலைமைக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தினார். எடப்பாடி பழனிச்சாமி பலமான கூட்டணியை அமைக்க வேண்டும் என நினைக்குபோது, கூட்டணிக்கு யாரும் வராதபடி பேசியிருக்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்.
அதே போல், மதுரையைச் சேர்ந்த அதிமுக மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கில் அ.தி.மு.க. தலைமைக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட கல்குவாரி உரிமையாளரிடம் ரூ.6.80 கோடி மோசடியில் ஈடுபட்டதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்திலும் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளராக இருக்கும் செல்லூர் ராஜு பெயர் அடிபட்டது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. மூன்றாமிடம் சென்றதற்கு, தி.மு.க.வுடன் மறைமுகமாக முக்கிய நிர்வாகிகள் கைகோர்த்ததுதான் காரணம் என்ற குற்றச்சாட்டு இன்று வரை மறையவில்லை. இந்த நிலையில்தான் மதுரையிலும், விழுப்புரத்தைப் போல் மாற்றுக் கட்சி நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைவதற்கான பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஆனால், அவர்கள் மாவட்டச் செயலாளராக செல்லூர் ராஜு இருக்கும்வரையில் நாங்கள் அ.தி.மு.க.வில் இணைந்து எந்த பலனும் இல்லை. காரணம், ‘நாங்களும் ஒரு எதிர்பார்ப்பில்தான் அ.தி.மு.க.வில் இணைவோம். ஆனால், எங்களது எதிர்பார்ப்பை செல்லூர் ராஜு பூர்த்தி செய்யமாட்டார்’ என்கிறார்கள் அ.ம.மு.க., ம.நீ.ம, நா.த.க. உள்பட சமீபத்தில் கட்சி ஆரம்பித்த த.வெ.க.வில் உள்ள நிர்வாகிகள் சிலர்!
வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலுக்குள் இன்று முதல் வேலை பாருங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தி.மு.க.வினருக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், மதுரை அ.தி.மு.க. மந்த நிலையில் இருக்கிறது’’ என வருத்தப்பட்டனர்.
எடப்பாடி பழனிசாமி சாட்டை சுழற்று வாரா? இல்லை மௌனம் காப்பாரா..? என்ற எதிர்பார்ப்பில் ரத்தத்தின் ரத்தங்கள் உள்ளனர்.