‘‘போக்குவரத்துத்துறை நிதிநிலை மேம்பட வாய்ப்பில்லை. இது பொதுமக்களுக்கான சேவை துறையாக செயல்பட்டு வருகிறது. அதில் லாப நோக்கம் இல்லை’’ போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அரியலூரில் திமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் இன்று (நவ.06) நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நவ.15-ம் தேதி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த மகிமைபுரம் கிராமத்தில் சிப்காட் தொழிற்பேட்டைக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க இருக்கிறார். தொடர்ந்து, அரியலூரில், பெரம்பலூர் – அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர், பெரம்பலூரில் கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார்.
தீபாவளியை பொறுத்தவரை கடந்த 2 ஆண்டுகளாக எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் பொதுமக்கள் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்தாண்டு மற்ற பகுதிகளில் இயக்கப்படும் பேருந்துகளை மாற்றி சென்னைக்கு அனுப்பிவைப்பது முற்றிலும் தவிர்க்கப்பட்டு, தனியார் பேருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டன. இந்தாண்டில் 5.75 லட்சம் பேர் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு தீபாவளிக்கு பயணித்துள்ளனர்.
கடந்தாண்டு 1.10 லட்சம் பேர் முன்பதிவு செய்து பயணித்தனர். அதுவே இந்த ஆண்டில் 1.52 லட்சம் பேர் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர். சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் கடந்த 3-ம் தேதி ஒரே நாளில் 75 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் முன்பதிவு செய்து பயணித்தனர். இது தமிழக போக்குவரத்துத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத முன்பதிவாகும்.
அரசின் இந்த செயல்பாடு பொதுமக்களால் பாராட்டப்பட்டு வருகிறது. போக்குவரத்துத்துறை நிதிநிலை மேம்பட வாய்ப்பில்லை. இது பொதுமக்களுக்கான சேவை துறையாக செயல்பட்டு வருகிறது. இதில் லாப நோக்கம் இல்லை. டீசல் விலை கடுமையாக உயர்ந்தபோதும், மற்ற மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்ந்த நிலையில், தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை. மேலும், மகளிருக்கு கட்டணமில்லா பயணம், மாணவ – மாணவியருக்கு இலவச பயண அட்டை – இவை அனைத்துக்குமான தொகையை தமிழக முதல்வர் அளித்து வருகிறார்.
மக்களுக்கு நிறைவான பயணத்தை தர வேண்டும் என்ற நோக்கில் தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார். மேலும், சிறப்பான இந்த சேவையை வழங்க போக்குவரத்துத்துறையில் பணிபுரியும் அனைவரின் முழு ஒத்துழைப்பும், அயராத பணியுமே முக்கியக் காரணம்’’ இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.