‘‘யார் எந்த திசையில் இருந்து வந்தாலும் 2026 தேர்தலில் திமுகவுக்கே வெற்றி’’ என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர், மரகதம் கந்தசாமி மண்டபம் முன்பு புதிதாக வெண்கலத்தால் அமைக்கப்பட்ட கலைஞரின் திருவுருவ சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, கலைஞர் சிலையை ரிமோட் மூலம் திறந்து வைத்து பேசியதாவது: கடந்த மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வெற்றியை கொடுத்தீர்கள். எல்லாருக்கும் நன்றி.. இன்றிலிருந்து நாம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்குவோம். நம் திட்டங்கள் எல்லாத்தையும் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பயனாளிகள் இருக்காங்க. அவர்கள் ஒவ்வொருவரையும் தொடர்பு கொண்டு பிரச்சாரத்தை தொடங்குவோம்.
கலைஞரின் சிந்தனைகளை, எழுத்துகளை மக்களிடம் கொண்டு செல்லவே கலைஞர் சிலைகள் திறக்கப்படுகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றிபெற்று தலைவரை முதல்வர் நாற்காலியில் உட்கார வைப்போம். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் யாராக இருந்தாலும், எதிர்த்து யார் வந்தாலும், எப்பேர்பட்ட கூட்டணி அமைச்சாலும், எந்த திசையில் இருந்து வந்தாலும், டெல்லியில் இருந்து வந்தாலும் சரி.. லோக்கலில் இருந்து வந்தாலும் சரி.. திமுகவுக்கே வெற்றி என்பதை இந்நேரத்தில் சொல்லிக்கொள்கிறேன் என்றார்.
பின்னர், விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான வங்கி கடன் இணைப்புகள் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: திராவிட மாடல் அரசு விளையாட்டுதுறைக்கு தருகின்ற முக்கியத்துவத்தின் காரணத்தால் ஆண்களுக்கு நிகராக பெண்களும் விளையாட்டு துறையை நோக்கி வருகிறார்கள். நம் அரசின் திட்டங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ஏதோ ஒருவகையில் நிச்சயம் பயனளித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் சிலர் மட்டும் குறைசொல்கிறார்கள். அவர்களுக்கு நாம் வார்த்தைகளால் பதில்சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.