பரபரப்பான அரசியல் சூழலில், அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், இன்று நடந்து வருகிறது. சென்னை, ராயப்பேட்டையில் உள்ள, கட்சி தலைமை அலுவலகத்தில், இன்று காலை 10:00 மணிக்கு தொடங்கிய கூட்டத்திற்கு, பொதுச் செயலர் பழனிசாமி தலைமை வகிக்க உள்ளார். கூட்டத்தில், மாவட்ட செயலர்கள், பிற மாநில செயலர்கள் பங்கேற்றுள்ளனர்.
நடிகர் விஜய், கட்சி துவக்கி உள்ள நிலையில், கட்சியினரை தக்க வைக்கவும், கட்சியை வளர்க்கவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
கட்சி ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடத்த தலைமை உத்தரவிட்டும், சில மாவட்ட செயலர்கள் கூட்டம் நடத்தவில்லை. அவர்களை எச்சரித்து, அனைவரும் கட்சிப் பணிகளை தீவிரப்படுத்த, பழனிசாமி உத்தரவிடுவார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில்தான் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று தலைநகரில் (சென்னை) பிரம்மாண்ட போஸ்டர்களை ஒட்டியிருக்கிறார்.
அந்த போஸ்டரில்
‘‘இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன் சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு’’ என வள்ளுவரின் வாசம் இடம் பெற்றிருந்தது.
இந்தக் குரளுக்கு பொருளைப் பார்த்தோம் என்றால், ‘இனிய சொற்களைக் கூறி, வேண்டுவோர்க்கு வேண்டுவன கொடுத்து, அவனுடைய சொல்லாற்றலாலேயே, இவ்வுலகமானது அவன் கருதுகின்ற அளவுக்கு அவனுடையதாக ஆகிவிடும்’ என்பதுதான் (குறள் & 387).
மேலும், அந்த பிரம்மாண்ட போஸ்டரில் தலைமைச் செயலகம் படமும் இடம் பெற்றிருக்கிறது. எனவே, வரும் காலம் எடப்பாடியாரின் காலம் என மருத்துவர் சரவணன் ஒட்டியிருக்கும் போஸ்டர்கள்தான் ரத்தத்தின் ரத்தங்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.