சமீபத்தில்தான் அண்ணா அறிவாலயத்தில் நடந்த கூட்டத்தில், ‘ தி.மு.க. சார்பில் நடக்கும் கூட்டங்களில் இளைஞர்களுக்கு பேச வாய்ப்பளிக்க வேண்டும்’ என அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

தி.மு.க.வில் இளைஞர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும் முதல்வர் உத்தரவுப் பிறப்பித்திருந்தார். இதற்கு, ‘தி.மு.க. பேசிப் பேசியே வளர்ந்த இயக்கம்’ என்ற காரணத்தை கூறியிருந்தாலும், சமீபத்தில் நடந்த த.வெ.க. மாநாட்டில் இளைஞர்கள் லட்சக்கணக்கில் கூடியதுதான் திராவிடக் கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிது.

இந்த நிலையில்தான் இளைஞர்களை அ.தி.மு.க. பக்கம் திசை திருப்பும் முயற்சியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இறங்கியிருக்கிறார். இது தொடர்பாக அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசியபோது, ‘‘தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா இருந்தவரை அதிமுக ஒரு அசைக்க முடியாத சக்தியாக இருந்தது. நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் கூட்டணி கட்சிகள் இல்லாமல் அனைத்து தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் அளவுக்கு அக்கட்சியை வலிமையாக வைத்திருந்தார்.

அவரது மறைவுக்கு பிறகு அதிமுக பல்வேறு பின்னடைவுகளை சந்தித்து வருகிறது. முக்கிய நிர்வாகிகள் பலர் ஓரம் கட்டப்பட்டது, தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சீனியர்கள் போர்க் கொடி என பல பிரச்சினைகள் இருக்கிறது. மேலும் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றதற்கு பிறகு சந்தித்த ஆர்கே நகர் இடைத்தேர்தல், 2019 நாடாளுமன்ற தேர்தல், 18 தொகுதி இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல் ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2003 ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் தொடர்ந்து தோல்விகளையே எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக சந்தித்தது.

அதே நேரத்தில் எதிர் அணியில் இருக்கும் திமுகவோ அனைத்து தேர்தல்களிலும் கூட்டணி பலத்துடன் வெற்றி வாகை சூடி இருக்கிறது. அதனால் 2026 சட்டசபை தேர்தலில் சட்டசபை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நிலை எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏற்பட்டிருக்கிறது. ஒருவேளை தோல்வியை சந்தித்தால் அதற்கு பிறகு கட்சியில் என்ன நடக்கும் என்பது அவருக்கே தெரியும். மேலும் நாம் தமிழர் கட்சி, விஜய் கட்சி ஆகியவற்றுக்கு அதிமுகவினர் தாவாமல் இருப்பதற்காகவும் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை அவர் வகுத்திருக்கிறார்.

தற்போது கட்சியில் சுமார் 2 கோடி உறுப்பினர்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில் ஒன்றரை லட்சம் நிர்வாகிகள் மட்டுமே நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர். இதை அடுத்து ஊராட்சியில் அனைத்து கிளை வார்டுகள், கட்சிக்கான வட்டச் செயலாளர், அவை தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளை தவிர்த்து 38 அதிமுக மாவட்டங்களில் ஒரு லட்சம் பதவிகளை உருவாக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு இருக்கிறார்.

கிளை, பேரூர், ஒன்றியம், நகரம், பகுதி, மாவட்ட நிர்வாகிகள் பதவிகளை தவிர மாணவர் அணி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு, அம்மா பேரவை, எம்ஜிஆர் மன்றம் உள்ளிட்ட அணிகளுக்கும் ஊராட்சி அளவில் பதவி வழங்கப்பட இருக்கிறது. தேவைப்பட்டால் கூடுதலாக சில அணிகளை உருவாக்கி அவற்றுக்கும் நிர்வாகிகள் நியமிக்க திட்டமிட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

தற்போது தமிழக வெற்றி கழகத்தின் தாக்கம் காரணமாக திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருப்பவர்கள் அந்த கட்சியின் பக்கம் சாய திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. அதே நேரத்தில் இளைஞர் பட்டாளம் அதிமுகவுக்கு தேவை. இதன் காரணமாகவே புதிய பதவிகளை வழங்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. மேலும் ஏற்கனவே கட்சியில் இருக்கும் சீனியர்களின் வாரிசுகளுக்கும் பழைய நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அவர்களது குடும்பத்தினருக்கும் பதவிகள் வழங்க திட்டமிடப்பட்டிருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal