வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் திருமாவளவனின் வி.சி.க. கட்சி அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர வாய்ப்பிருக்கிறது. இல்லை… இல்லை… த.வெ.க.வுடன் கூட்டணி சேர வாய்ப்பிருக்கிறது என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில்தான், ‘‘2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில்தான் விசிக இருக்கும்’’ என்று திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.
இது தொடர்பாக திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், ‘‘திமுக கூட்டணியில் நீடிக்கலாமா? வேண்டாமா? என்ற ஊசலாட்டத்தில் விசிக இல்லை. திமுக கூட்டணியில் தொடர்வது என்ற உறுதியான நிலைப்பாட்டில் விசிக உள்ளது. வேறு கூட்டணிக்கு செல்ல வேண்டிய தேவை எதுவும் எங்களுக்கு இல்லை’’ என பேசியிருக்கிறார்.
திருமாவின் இந்த உறுதியான நிலைப்பாட்டிற்கு பின்னணியில் பா.ம.க. இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. காரணம், பா.ம.க. அதிமுகவுடனோ அல்லது விஜய் கட்சியுடனோ கூட்டணி வைக்கும் பட்சத்தில் வி.சி.க. அங்கு செல்ல வாய்ப்பில்லை.
ஏற்கனவே இருக்கும் தி.மு.க.வுடனேயே இருக்கலாம் என உறுதியான நிலைப்பாட்டை திருமாவளவன் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.