தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விஜய்யை மிகவும் கோபத்துடன் மறைமுகமாக ஒருமையில் சாடிய வீடியோவைப் பார்த்து விஜய் கொடுத்த ரியாக்ஷன்தான் த.வெ.க.வினரை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
சமீபத்தில் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டில் பேசிய அதன் தலைவர் விஜய், யார் அரசியலுக்கு வந்தாலும் இவர்கள் கலர் பூசுகிறார்கள். நீ பாஸிசம்.. நீ அது.. நீ இது என்று கலர் அடிக்கிறார்கள். எனக்கு கலர் அடிக்க முடியாது. சொல்லிவிட்டேன். அவர்கள் பாசிசம் பேசுகிறார்கள் என்றால்.. நீங்கள் என்ன பேசுகிறீர்கள். நீங்கள் என்ன பாயாசமா பேசுகிறீர்கள்.
நமக்கு இன்னொரு எதிரியும் இருக்காங்க. ஊழல் இல்லாத ஆட்சியை கொடுப்போம் என்று கூறி உள்ளோம். இதன் அர்த்தம் என்ன.. முகமுடி போட்ட கரெப்சன் கபடிதாரிகள் தான் இப்ப நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். முகமுடி போட்ட கரெப்சன் கபடிதாரிகள் அகற்றப்பட வேண்டும். இவர்களை எல்லாம் அகற்ற வேண்டும். முகமுடி போட்ட கரெப்சன் கபடிதாரிகள் இருக்கிறார்களே.. அவர்களும் நம்முடைய எதிரிகள்தான். வெறுப்பு அரசியலை ஒருபோதும் கையிலெடுக்கப் போவதில்லை. நம்மள பாத்து யாரும் விசிலடிஞ்சான் குஞ்சு என சொல்லிட கூடாது. பெண்களை அரசியல் வழிகாட்டிகளாக ஏற்கும் முதல் அரசியல் கட்சி தவெக, என்று நடிகர் விஜய் பேசி இருந்தார்.
இந்நிலையில், தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், முதல் முறையாக தவெக தலைவர் விஜய்க்கு மறைமுக பதிலடி கொடுக்கும் வகையில் பேசி இருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ‘‘திமுக அரசு சிறப்பாகச் செயல்படுவது சிலருக்கு பிடிக்கவில்லை. இன்று வருபவன் எல்லாம், புதிது புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும், ஒழியவேண்டும் என பேசி வருகிறார்கள். தேவையில்லாமல் அவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. பேரறிஞர் அண்ணா பாணியில் சொல்கிறேன்.. வாழ்க வசவாளர்கள்.
அவர்கள் பேசுவதைப் பற்றி எல்லாம் நான் கவலையே படவில்லை. எங்கள் போக்கு மக்களுக்கு நல்லது செய்யும் போக்குதான். மக்களுக்கு பணியாற்றவே எங்களுக்கு நேரம் போதவில்லை. எந்த நம்பிக்கையோடு மக்கள் இந்த ஆட்சியை எங்களிடம் ஒப்படைத்தார்களோ அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
புதுசு புதுசா கட்சி ஆரம்பிக்கிறவன் எல்லாம் திமுகவை அழிப்பேன், ஒழிப்பேன்னு பேசுகிறான். அதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க நமக்கு நேரமில்லை என்று முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோ ஷார்ட்டைக் கேட்டு புன்முறுவல் செய்திருக்கிறார் த.வெ.க. தலைவர் விஜய்.
அருகில் இருந்த த.வெ.க. நிர்வாகிகளிடம், ‘‘சி.எம். பேச்சைக் கேட்டீங்களா? என் மீது எவ்வளவு கோபமிருந்தா ஒருமையில் பேசுவார்? இதுதான் நமக்குத் தேவை. அந்த கோபம் தான் நாம் சரியான அரசியலைத் தேர்வு செய்திருக்கிறோம்னு அர்த்தம். திமுக தான் நமது அரசியல் எதிரி என்று நாம் எடுத்த முடிவு சரிதான்னு சி.எம்.மே நம்மளை நினைக்க வைத்துவிட்டார். முதல் அடியிலேயே நமக்கு வெற்றிதான்’’ என்று பேசியிருக்கிறார் விஜய். அதைக் கேட்டு நிர்வாகிகள் உற்சாகமாகியிருக்கிறார்கள்.
தமிழக அரசியல் களத்தில் விஜய்யின் ஒவ்வொரு அடியும் நிதானமாக எடுத்து வைத்திருப்பதுதான், அனைத்துக் கட்சிகளையுமே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.