ஜம்மு காஷ்மீர் முதல்வராக இன்று பதவியேற்கிறார் உமர் அப்துல்லா. இந்த நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், கனிமொழி எம்.பி. கலந்து கொள்கிறார்.
ஜம்மு காஷ்மீரின் புதிய முதலமைச்சராக தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா இன்று பதவியேற்க உள்ளார். அக்டோபர் 16 ஆம் தேதி பதவியேற்குமாறு லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹாஅனுப்பிய கடிதத்தை அப்துல்லா நேற்று முதல்நாள் வெளியிட்டார்.
அப்துல்லாவுக்கு எழுதிய கடிதத்தில், சின்ஹா, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுத் தலைவர் டாக்டர் ஃபரூக் அப்துல்லாவிடம் இருந்து 2024 அக்டோபர் 11ஆம் தேதி கடிதம் வந்துள்ளது, அதில் நீங்கள் ஒருமனதாக சட்டப்பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதனால் நீங்கள் முதல்வராக பதவி ஏற்கலாம். அக்டோபர் 16 ஆம் தேதி பதவியேற்கலாம், என்று அப்துல்லாவுக்கு எழுதிய கடிதத்தில், சின்ஹா குறிப்பிட்டு உள்ளார்.
இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறார் கனிமொழி எம்.பி. இதற்காக நேற்று சென்னையில் இருந்து டெல்லி சென்றவர், அங்கிருந்து இன்று காஷ்மீர் செல்கிறார். இந்த நிகழ்வில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினை அழைத்திருந்தார் உமர் அப்துல்லா.
சென்னையில் மழை வெள்ளம் பிரச்சனை இருந்ததால், அதைத் தவிர்த்துவிட்டு செல்வது, தேவையற்ற விமர்சனங்களை உருவாக்கும் என நினைத்து, கனிமொழியை அனுப்பி வைத்துள்ளார் ஸ்டாலின். நேற்று முதல்வர் ஸ்டாலின் மழை பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார்.
மழை காரணமாக தான் செல்லாமல் தனக்கு பதிலாக டி.ஆர்.பாலுவை அனுப்பி வைக்கலாம் என ஸ்டாலின் யோசித்தாராம். ஆனால், என்ன நினைத்தாரோ திடீரென கனிமொழியிடம், ‘நான் செல்வதற்கு பதிலாக நீ, போய்ட்டு வாம்மா’ என்று கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
ஏற்கனவே, உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்ட நிலையில், கனிமொழியின் ஆதரவாளவர்கள் அவரை தென்மண்டல அமைப்புச் செயலாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். ஏற்கனவே, கனிமொழியின் ஆதரவாளர்கள் மனவருத்தத்தில் இருந்த நிலையில், முதல்வர் செல்லவிருந்து பதவியேற்பு நிகழ்ச்சிக்கு கனிமொழியை அனுப்பி வைத்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்!