தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நேற்று காலை தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 05 : 30 மணியளவில் தெற்கு வங்கக்கடலன் மத்திய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, இன்று 08:30 மணியளவில் அதே பகுதியில் நிலவுகிறது. இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 7 நாட்களுக்கு மழை நீடிக்கும்.திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இங்கு கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.

வேலூர் , ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்றும் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளையும் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 17 ம் தேதியும் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டையில் இன்றும்கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், திருச்சி, மற்றும் புதுக்கோட்டையில் நாளையும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் 17 ம் தேதியும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

அக்.,18 முதல் 21 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal