நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் முக்கிய நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் கண்டுள்ள நிலையில், அவரது கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இந்த மாதம் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கான பந்தல் கால் நடும் நிகழ்வு கடந்த 4 ஆம் தேதி அதிகாலையில் நடைபெற்றது.

இதுதொடர்பாக கட்சியினருக்கு முதல் கடிதம் எழுதினார் தவெக தலைவர் விஜய். நம் கழகத்தின் முதல் மாநில மாநாடு என்பது நம்முடைய அரசியல் கொள்கைப் பிரகடன மாநாடு. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமெனில், இது நம்முடைய கொள்கைத் திருவிழா. நம் கழகம், மற்ற அரசியல் கட்சிகள் போல் சாதாரண இயக்கமன்று. இது ஆற்றல் மிக்கப் பெரும்படை இளஞ்சிங்கப் படை, சிங்கப் பெண்கள் படை, குடும்பங்கள் இணைந்த கூட்டுப் பெரும்படை என அதில் குறிப்பிட்டிருந்தார் விஜய். தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் விஜய் ரசிகர்கள், இளைஞர்கள் மட்டுமல்லாது முன்னணி அரசியல் கட்சியில் உள்ள தொண்டர்களும் இணைந்து வருகின்றனர். மேலும், நடைபெற இருக்கும் தவெக மாநாட்டின்போது முன்னணி அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்களும் இணைய உள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன.

அதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருக்கும் செஞ்சி ராமச்சந்திரன் விஜய்யின் தவெக கட்சியின் அவைத் தலைவராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியானது. ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “வேண்டுமென்றே இது போன்ற புரளிகளை கிளப்பி விடுகின்றனர், அதிமுக என்பது ஒரு கடல், இதில் அவரை போல ஆயிரக்கணக்கானோர் இருக்கின்றனர். எனவே இது போன்ற வதந்தியை கிளப்பும் ஊடகங்களுக்கு கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

இந்நிலையில், த.வெ.க-வில் இணைய உள்ளவர்களில் பெரும்பாலானோர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தான் என்ற தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதை உறுதி செய்யும் வகையில், கடந்த சில நாட்களாக நாதகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் சீமான் மீது குற்றம்சாட்டி அக்கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். கிருஷ்ணகிரி நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக மண்டல செயலாளர் கரு.பிரபாகரன் தலைமையில் அறிவித்தனர். அதைத்தொடர்ந்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட நாதக செயலாளர் சுகுமார், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தற்போது நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவர்கள் விஜய் கட்சியில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. அதையொட்டியே அவர்கள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. வரும் நாட்களில் மேலும் பல முக்கிய நிர்வாகிகளும் கட்சியில் இருந்து விலகி, விஜய் கட்சியில் இணையத் தயார் ஆவார்கள் எனக் கூறப்படுகிறது.

நாம் தமிழர் கட்சியில் பெரும்பான்மையாக இளைஞர்கள் இருந்து வரும் நிலையில், புதிதாக வந்திருக்கும் விஜய்யின் கட்சிக்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்துள்ளது நாம் தமிழர் கட்சிக்கு பெரிய அடியாகப் பார்க்கப்படுகிறது. ஆக, விஜய் கட்சி வருகையால், நாதக-வின் வாக்குகள் சிதறப்போகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளிடமும், தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் பேசி வருவதாகவும், முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் என உறுதி அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

அதன் அடிப்படையிலேயே விழுப்புரம் மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர்கள் நாதகவில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் அரசியல் வருகையால் எந்த கட்சிக்கு பாதிப்பு இருக்கலாம் என நினைக்கிறீர்கள் என சீமானிடம் கேட்ட போது, “விஜய் அரசியல் வருகையால் எங்களுக்கு பாதிப்பு இல்லை. 2026-சட்டமன்ற தேர்தலிலும் நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம். எங்களால் தான் மற்றவர்களுக்கு பாதிப்பு” என சீமான் பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal