கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை ஓட்டல் அதிபர் மன்னிப்பு கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு லண்டனில் இருந்த அண்ணாமலை மன்னிப்பு கோரினார். இது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், வானதி சீனிவாசனுக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.
கோவை விவகாரம் நீருபூத்த நெருப்பாக தமிழக பா.ஜ.க.வில் இருந்து கொண்டிருக்கும் நிலையில், அண்ணாமலைக்கு எதிராக ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சென்னையில் ஆலோசனை நடைபெற்றிருப்பதுதான், தமிழக பா.ஜ.க.வில் மேலும் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.
இது குறித்து கமலாலய வட்டாரத்தில் விசாரித்தோம். ‘‘சார், தமிழகத்தில் பாஜ மாநில தலைவராக அண்ணாமலை உள்ளார். இவர், தலைமை பொறுப்பு ஏற்று அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பொதுத்தேர்தல்களில் போட்டியிட்டார். ஆனால், பாஜ படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில், பாஜவுடன் கூட்டணி சேர்ந்ததால் தான் அதிமுக தோல்வி அடைந்தது என்று அதிமுக கட்சியில் பரவலாக பேசப்பட்டது. இதையடுத்து அதிமுக & பாஜ இடையே கடும் வார்த்தை போர் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அதிமுக மறைந்த தலைவர்களை அண்ணாமலை கடுமையாக விமர்சித்து பேசினார். இதனால் கோபம் அடைந்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக & பாஜ கூட்டணியை முறித்துக் கொண்டார். பின்னர் கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜ தனித்தனியே போட்டியிட்டது. இந்த தேர்தலில் 40 இடங்களிலும் இரண்டு கட்சிகளும் படு தோல்வியை சந்தித்தது.
தொடர்ந்து தமிழக தேர்தல்களில் பாஜக தோல்வி அடைந்தாலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகத்தில அனைத்துக்கட்சிகளையும், தலைவர்களையும் விமர்சித்து வந்தார். இதனால் பாஜக நிர்வாகிகள் இடையே அண்ணாமலைக்கு கெட்ட பெயர் உருவானது. இந்த நிலையில், அண்ணாமலை திடீரென அரசியல் தொடர்பான படிப்புக்காக கடந்த ஆகஸ்டு 29ம் தேதி லண்டன் புறப்பட்டு சென்றார். 3 மாத படிப்பை முடித்துவிட்டு நவம்பர் இறுதியில் தமிழகம் திரும்புகிறார்.
அண்ணாமலை வெளிநாடு சென்றதால், தமிழக பாஜவுக்கு இடைக்கால தலைவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால், தமிழக பாஜவை வழிநடத்த 6 பேர் கொண்ட குழுவை டெல்லி மேலிடம் கடந்த ஆகஸ்டு மாதம் 30ம் தேதி நியமித்தது. இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, மாநில துணை தலைவர்கள் எம்.சக்கரவர்த்தி, பி.கனகசபாபதி, மாநில பொதுச்செயலாளர்கள் எம்.முருகானந்தம், ராம சீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இந்த 6 பேரும் அண்ணாமலைக்கு எதிராகவே செயல்பட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணாமலை வெளிநாடு சென்றுள்ளதை பயன்படுத்திக் கொண்டு தமிழகத்தில் பாஜக கட்சியை வளர்க்க டெல்லி தலைவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சில வாரங்களாக அடிக்கடி தமிழகம் வருகிறார். தமிழகத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுவதுடன், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.
இதன் ஒரு கட்டமாக இரு நாட்களுக்கு முன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஒரு வங்கி கெஸ்ட் ஹவுசில் தமிழக பாஜவின் 2ம் கட்ட தலைவர்களை அழைத்து பேசினார். இந்த கூட்டத்திற்கு, அண்ணாமலையின் ஆதரவாளரான கரு நாகராஜன் உள்ளிட்ட தலைவர்களையும், அதேபோன்று முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆதரவாளர்களையும் அழைக்கவில்லை.
இந்த கூட்டத்தில் நிர்மலா சீதாராமனின் தீவிர ஆதரவாளரான வானதி சீனிவாசன், மாநில செயலாளர் சூர்யா, கறுப்பு முருகானந்தம், பால்கனகராஜ், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 7 முக்கிய நிர்வாகிகளை தனியாக அழைத்து நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தியுள்ளார். அண்ணாமலை நடவடிக்கையால் தமிழக பாஜகவில் எந்த வளர்ச்சியும் இல்லை. 2026ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் தமிழகத்தில் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் தமிழகத்தில் பாஜக காலூன்ற எந்த மாதிரியான கூட்டணியை ஏற்படுத்த வேண்டும், கட்சி தலைமை இதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து நிர்மலா சீதாராமன் தீவிர ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது, ‘கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததால்தான் நான்கு பேர் சட்டமன்றத்திற்குள் நுழைந்திருக்கிறார்கள். அண்ணாமலை மாநில தலைவராக இருக்கும் வரை அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க முடியாது. திராவிட கட்சிகளுக்கு எதிரான வாக்குகளை நடிகர் விஜய் பிரித்துவிடுவார். எனவே, வரும் 2026ல் வலுவான கூட்டணி அமைத்தால்தான் வெற்றி வாகை சூட முடியும்’’ என நிர்மலா சீதாராமனிடம் கூறியிருக்கிறார்கள்.
எனவே, தமிழக பா.ஜ.க.வில் விரைவில் மாற்றம் நிகழ்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!