அதிமுக உறுப்பினர்கள் பங்கேற்கும் செயல்வீரர் கூட்டங்களை வரும் அக்.23-ம் தேதிக்குள் நடத்தி முடிக்குமாறு கட்சியினருக்கு பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து உறுப்பினர் உரிமைச் சீட்டுகளைப் பெற்றுச் சென்ற நிர்வாகிகளில் சிலர், சம்பந்தப்பட்ட கட்சி உறுப்பினர்களிடம், உறுப்பினர் அட்டைகள் வழங்கும் பணியை இன்னும் நிறைவு செய்யவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. எனவே, நிர்வாகிகள் அனைவரும் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களிடம் கட்சி உறுப்பினர் அட்டைகளை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை வழங்கும் பணி நிறைவு பெற்றவுடன், சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்டத்துக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, மாநகராட்சிப் பகுதி வாரியாக கட்சி செயல்வீரர் ஆலோசனைக் கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அதில் கட்சியின் தலைமை செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், ஒன்றியம், நகரம் மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி அளவில் நடைபெறும் கூட்டங்களில் சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த எம்.பி., எம்எல்ஏ.க்கள், முன்னாள் எம்.பி., எம்எல்ஏ.க்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி பகுதி அளவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கட்சி உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ளும் வகையில் ஆலோசனைக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இந்த ஆலோசனைக் கூட்டங்களை வரும் அக்.23-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். அவ்வாறு நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொள்பவர்களின் கையொப்பங்களை மினிட் புத்தகங்களில் பெற்று, அதன் நகலை தலைமைக்கு தவறாமல் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி மா.செ.க்களுக்கு இப்படி உத்தரவு பிறப்பித்து வரும் நிலையில், பல மாவட்டங்களில் உறுப்பினர் அட்டைகளை நிர்வாகிகள் இல்லத்தில் உறங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உதாரணத்திற்கு திருச்சி மாவட்டம் துறையூரில் அ.தி.மு.க. உறுப்பினர் அடையாள அட்டையை கட்சியினர் பெற விருப்பம் இல்லாமல் நிர்வாகிகள் வீட்டிலேயே உறங்குவதாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த நிர்வாகியே பதிவிட்டிருக்கிறார். இந்த நிலை திருச்சி மாவட்டத்தில் மட்டும் இல்லை. கோவை, பெரம்பலூர், மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் இதே நிலைதான் என்கிறார்கள்.
அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்திற்கு பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்று வருடங்கள் முடிந்துவிட்டது. ஆனாலும், புது ரத்தம் பாய்ச்சாமல் இருப்பது ஏனோ? என வருத்தத்தில் இருக்கிறார்கள் மூத்த ரத்தத்தின் ரத்தங்கள்..!