திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே திமுக கொடியுடன் கூடிய ஃபார்சூனர் காரில் வந்த கும்பல் சாலையோரம் சென்று கொண்டிருந்த ஆடுகளை திருடி சென்றது. இது அருகே உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருவதோடு, ஆடுகளை திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் சில இடங்களில் ஆடுகளை திருடிச்செல்லும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் ஆடு திருடும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கும்.

இந்நிலையில் தான் தற்போது பட்டப்பகலில் சுற்றிலும் வீடுகள் இருக்க சொகுசு காரில் வந்த கும்பல் அசால்டாக சாலையோரம் சென்ற ஆடுகளை காரில் திருடி சென்றுள்ளது என்றால் நம்ப முடிகிறதா?.. ஆம் இது முற்றிலும் உண்மை. இந்த சம்பவம் என்பது திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே கீதாபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன். அதே பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர்கள் ஆடுகள் வளர்த்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் கடந்த 14ம் தேதி கணசேனின் தோட்டத்தில் ஆடுகள் மேய்ந்தன. அப்போது குட்டி போடும் நிலையில் உள்ள ஆடுகளை கணேசன் வீட்டுக்கு விரட்டினார். தோட்டத்தில் இருந்து இந்த ஆடுகள் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அதன்பிறகு மாலையில் வீட்டுக்கு அனுப்பிய ஆடுகளை எண்ணிப்பார்த்தார். அப்போது 3 ஆடுகள் மாயமாகி இருந்தது. இந்த ஆடுகளை அவர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் ஆடுகள் கிடைக்கவில்லை.

இதற்கிடையே தான் அந்த பகுதியில் சென்ற சிலர் காரில் வந்த கும்பல் ஆடுகளை திருடி சென்றதாக தெரிவித்தனர். குறிப்பாக அந்த பகுதியில் உள்ள முச்சந்தியில் காரை நிறுத்தி ஆடுகளை சிலர் பிடித்து சென்றதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உரிமையாளர்கள் சார்பில் ஸ்ரீரங்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த பகுதியில் உள்ள வீட்டில் இருக்கும் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.

அப்போது ஃபார்சூனர் காரில் வந்த கும்பல் மதியம் 1.30 மணியளவில் சாலையோரம் நடந்து சென்ற 3 ஆடுகளை காரில் திருடி செல்வது தெரியவந்தது. அதாவது முச்சந்தியில் ஆடுகள் சாலையோரம் நடந்து செல்கின்றன. அப்போது திடீரென்று ஃபார்சூனர் கார் வந்து நிற்கிறது. அதில் இருந்து இறங்கிய ஒருவர் 2 ஆடுகளை திருடி காருக்குள் தள்ளுகிறார்.

இதனை பார்த்ததும் மற்ற ஆடுகள் சத்தம் எழுப்பியபடி கலைந்து செல்கிறது. அதன்பிறகு அந்த கார் அப்படியே பின்நோக்கி செல்கிறது. அதன்பிறகு சிறிது நேரத்தில் மீண்டும் முச்சந்திக்கு வரும் காரில் இருந்து இறங்கிய நபர் இன்னொரு ஆட்டையும் திருட கார் வேகமாக புறப்பட்டு செல்கிறது. அந்த காரின் முன்பகுதியில் திமுகவின் கொடி இடம்பெற்றிருந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடு திருடிய கும்பலை தேடிவருகின்றனர். ஸ்ரீரங்கம் பகுதியில் தற்போது ஆடு திருடும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த ஒரு மாதமாக ஆடு திருட்டு அதிகரித்தாலும் கூட போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். தற்போது போலீசார் ஆடு திருடும் கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal