உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. கடந்த 18ம் தேதி அறிவிப்பு வெளியாகிறது என்றெல்லாம் செய்திகள் வந்தன. தி.மு.க. தலைமைக்கு நெருக்கமான பத்திரிகையாளர் ஒருவரே உதயநிதி முன்கூட்டி வாழ்த்து தெரிவித்து வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையிதான் இன்றைய தினம் காலை 11.30க்கு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அறிவிப்பு வெளியாக வில்லை. துணை முதல்வர் அறிவிப்பு எப்போது வெளிவரும், தாமதமாவது ஏன் என செனடாப் சாலை வட்டாரத்தில் விசாரித்தோம்…
‘‘சார், திமுகவின் அடுத்த வாரிசு யார்? துணை முதல்வர் பதியை உதயநிதிக்கு வழங்குவதன் மூலம் அதை வெளிப்படையாக இன்று அறிவிப்பார் என சீனியர் அமைச்சர்கள் உட்படப் பல காத்திருக்கும் நிலையில், அது பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகாதது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுவது உறுதியாகியிருக்கிறது. அதாவது, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல் தளத்தில் முதல்வர் ஸ்டாலினின் அறை இருக்கிறது. அங்கே கீழ்த் தளத்தில் ஒரு அறையை மறுசீரமைப்பு செய்யும் பணிகள் வேகமாக இரவு பகல் பாராமல் நடைபெற்று வருகின்றன. அந்த அறையை துணை முதல்வர் உதயநிதிக்காகத் தயாராகி வருகிறது.
கோட்டையில் ஏற்கெனவே இடம் பற்றாக்குறை உள்ளது. அங்கே உள்ள அறைகள் பலவும் குறுகலானவை. எனவே மூன்று அறைகளாக இருந்ததை அகற்றிவிட்டு, அதை விசாலமாக ஒரே அறையாக மாற்றும் பணிகள் மும்முரம் பெற்றுள்ளன. இந்த அறை மாற்றி அமைக்கும் வேலைகள் கிட்டத்தட்ட 90% முடிவடைந்துவிட்டன. வண்ணம் பூசுவது மட்டுமே பாக்கி.
அதே சமயம், உதயநிதியின் துணை முதல்வர் துறைக்குச் செயலாளராக எந்த ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்படுவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. உதயநிதி தரப்பிலிருந்து இளம் ஐஏஎஸ் அதிகாரியை நியமித்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு கருத்து வைக்கப்பட்டுள்ளது.இப்போது உயதநிதியுடன் இணைந்து பணியாற்றி வரும் அதுல்ய மிஸ்ராவையே தன் துறைக்கு மாற்றிக் கொள்ளலாம் என உதய் ஒரு திட்டம் வைத்திருக்கிறார் என்கிறார்கள்.
அதே சமயம் உயர் கல்வித்துறை கவனித்து வரும் பிரதீப் யாதவ் ஐஏஎஸ் பெயர் அடிபடுகிறது. கூடவே தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவராக உள்ள சாய்குமார் ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்கலாம் என்று ஒரு பேச்சும் உலா வருகின்றது. கடந்த சில மாதங்கள் முன்னதாகவே துணை முதல்வர் பதவி உதயநிதிக்குக் கிடைத்திருக்க வேண்டியது. ஆனால், அதற்கு சீனியர் அமைச்சரான துரைமுருகன் இடைஞ்சலாக நிற்கிறார் என்றும் சொல்லப்பட்டது. அவரும் துணை முதல்வர் பதவியை உங்களுக்குக் கொடுத்தால் ஏற்பீர்களா? எனச் செய்தியாளர்கள் கேட்ட போது பெருந்தன்மையாக மறுக்கவில்லை. பதவி கொடுத்தால் யார் வேண்டாம் என்று சொல்வார்கள்? என்று தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினார்.
அடுத்து ரஜினியின் சர்ச்சை மூலம் அவர் அதிருப்தியில் இருக்கிறார் என்பது வெட்ட வெளிச்சமானது. ஆனால் முப்பெரும் விழாவில், எஸ்.எஸ். பழனிமாணிக்கம் பேசுகையில், ‘அன்பழகனைவிடப் பெரிய தலைவர்கள் யார் இருக்கிறார்கள்?’ என்று ஒரு பொடியை வைத்தார். அது துரைமுருகனை நோக்கி விடப்பட்ட அம்பு என்பது கட்சியினருக்கு நன்றாக தெரியும். அதை உணர்ந்த துரைமுருகன், முப்பெரும் விழாவை அடுத்து ஸ்டாலினைச் சந்தித்து உதயநிதியை துணை முதல்வராக்குவதற்கு இதுவே சரியான தருணம் என்று பேசியிருக்கிறார். மேலும் திமுக முதல் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உதயநிதியை துணை முதல்வர் ஆக்கியே தீரவேண்டும் என்பதில் வேகம் காட்டி வருகிறார்கள். எனவே விரைவில் உதயநிதி துணை முதல்வராக அறிவிக்கப்படுவார்’’ என்கிறார்கள்.