ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பின்னர் ஷகீலா, திரையுலகில் நடந்த பல அதிர்ச்சி தகவல்களை தன்னுடைய பேட்டியில் கூறி வரும் நிலையில், பிரபல நடிகைக்கு ஹோட்டல் அறையில் நடந்த அதிர்ச்சி தகவலை தற்போது கூறியுள்ளார்.
2017-ஆம் ஆண்டு பிரபல நடிகை காரில் வைத்து 4 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பின்னர், கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து, மலையாள நடிகைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் சர்ச்சைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்ட நிலையில், இதுகுறித்து குழு ஒன்று அமைக்கப்பட்டு நான்கு வருடங்களுக்கு பின்னர் இதுகுறித்து அறிக்கை ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. இதில் பல நடிகைகள் தங்களுக்கு படப்பிடிப்பில் நேர்ந்த பாலியல் சர்ச்சை குறித்து புகார் கொடுத்தனர். தற்போது இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன் லால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பின்னர் பொதுச்செயலாளர், பொருளாளர், மற்றும் செயலாளர் பதவியில் இருந்த 17 பேரும் அடுத்தடுத்து பதவி விலகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒவ்வொரு நாளும், ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து பல நடிகைகள் தங்களின் கருத்தை தெரிவித்து வருவதோடு, தங்களுக்கு நடந்த சில அதிர்ச்சி தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் ஏற்கனவே நடிகை ஷகீலா, மலையாள திரையுலகை போலவே தமிழ் திரையுலகிலும் இது போன்ற பிரச்சனைகள் உள்ளதாகவும், தெலுங்கில் இங்கிருப்பதை விட அதிகமாக உள்ளதாக பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். மேலும் நடிகைகளின் சம்மதத்தோடு தான் அட்ஜஸ்ட்மென்ட் நடப்பதாகவும், ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகும் போதே அந்த அக்ரீமெண்ட்டில் இது பற்றி கொடுக்கப்பட்டிருக்கும். ஆரம்பத்தில் ஒப்புக்கொண்டு பின்னர் நடிகைகள் வேண்டாம் என மறுப்பார்கள். இதன் விளைவே பிரச்சனையாக உருவெடுக்கிறது என தெரிவித்தார்.
இதை தொடர்ந்து ஷகீலா கொடுத்த புதிய பேட்டி ஒன்றில், தன்னுடைய கண் முன் நடிகை ரூபாஸ்ரீக்கு நடந்த பிரச்சனை பற்றி பேசியுள்ளார். தெலுங்கு படம் ஒன்றில் நடிகை ரூபாஸ்ரீ (பாரதி கண்ணம்மா சீரியல் அம்மா நடிகை) ஹீரோயினாக நடிக்க, நானும் அந்த படத்தில் நடித்தேன். நான் தங்கி இருந்த அறைக்கு எதிரில் தான் அவருக்கும் அறை ஒதுக்கப்பட்டிருந்தது.
நான் என்னுடைய தம்பி, நண்பர்கள், மற்றும் மேக்கப் ஆர்டிஸ்டுடன் சென்றேன். எப்போதும் அப்படி தான் செல்வேன். அப்போது திடீர் என அந்த நடிகையின் அறை முன்பு நான்கு பேர் குடித்து விட்டு வந்து கதவை தட்டி அவருக்கு தொல்லை கொடுத்தனர். அந்த பெண் அழுது, அலறியடித்து துடித்தார். நான் என் நண்பர்கள் மற்றும் தம்பியுடன் சென்று குடித்திருக்கிறீர்கள் வெளியே போங்க என சொன்னதும், அந்த ஆட்கள் என்னை முடித்துவிட்டார்கள். பின்னர் நான் அவர்களை அடிக்க ஒரு பெரிய பிரச்சனையே ஏற்பட்டுவிட்டது.
பின்னர் அந்த ஹோட்டலில் இருப்பவரை அணுகி… அந்த பெண்ணை அங்கிருந்து சென்னைக்கு அனுப்பி வைத்தோம். ஒருவேளை அந்த பெண் அட்ஜஸ்ட்மென்டுக்கு ஒப்புக்கொண்டு கூட வந்திருக்கலாம் ஆனால் நான்கு பேர் ஒரே நேரத்தில் அச்சுறுத்துவது போல் குடித்து விட்டு வந்து கதவை தட்டினால் யாருக்கு தான் பயம் வராது என ஷகீலா இந்த பேட்டியில் கூறியுள்ளார்.