மே 7ம் தேதி விஜய் முதல்வராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் கே.ஏ.செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த் உள்பட சிலர் அமைச்சர்களாகவும் பதவியேற்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதனையடுத்து தவெகவின் சட்டமன்றக் குழு தலைவராக அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தச் சூழலில், ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
இதற்கிடையே, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின். அவர் ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பினார். முதல்வர் ஸ்டாலினின் ராஜினாமாவை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஏற்றுக்கொண்டார். புதிய அரசு அமையும் வரை பதவி வகிக்குமாறு ஸ்டாலினிடம் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
தவெக தலைமையிலான புதிய அரசு அமையவுள்ள நிலையில், பதவியேற்பு விழா மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சாய்குமார், உள்துறை செயலாளர் மணிவாசன், காவல்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.
மே 8 ஆம் தேதிக்கு முன்பாக புதிய அரசு பதவியேற்க வேண்டும். அதனால் மே 7 ஆம் தேதி தமிழக முதல்வராக விஜய் பதவியேற்க உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பதவியேற்பு விழாவை கலைவாணர் அரங்கு அல்லது நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைமைச் செயலாளர் சாய்குமார், உள்துறை செயலாளர் மணிவாசன், காவல்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இன்று தவெக தலைவர் விஜய்யை சந்தித்து வாழ்த்து தெரிவித்து, பதவியேற்பு விழா தொடர்பாக ஆலோசிக்க உள்ளனர்.
