முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா மீது கடன் பிரச்சினை காரணமாக கொலை மிரட்டல் புகார் எழுந்துள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் ஓ.ராஜாவிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. போலீசார் இரு தரப்பினரையும் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, இவர் மீது பல்வேறு புகார்கள் உள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும் போதே ஆவின் சங்கத்தில் ஏற்பட்ட முறைகேடு காரணமாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர். ஆனால் அடுத்த ஒரு சில நாட்களில் மீண்டும் இணைந்தார். நில அபகரிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல புகார்கள் ஓ.ராஜா மீது உள்ளது. இந்தநிலையில் மீண்டும் ஒரு கொலை மிரட்டல் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஓ.ராஜா மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
தனது மகன் தொழில் செய்வதற்காக முன்னாள் பெரியகுளம் நகர் மன்றத் தலைவரும், தற்போதைய தேனி மாவட்ட ஆவின்பால் தலைவருமான ஓ.ராஜவிடம் 4 கோடி ரூபாய் பணம் கடனாக வாங்கியதாக தெரிவித்துள்ளார். இதற்காக என் பெயரிலும், என் மனைவி பெயரிலும் உள்ள தென்னந்தோப்பு அசல் பத்திரங்களையும், வாங்கி வைத்துக் கொண்டார். இதனையடுத்து ஓ.ராஜா பணம் திருப்பி கேட்டதையடுத்து முதல் கட்டமாக கடந்த 2021ஆம் ஆண்டு ஒரு கோடியே 98 லட்சம் பணத்தை திருப்பி கொடுத்தேன். அப்போது கொரோனா பாதிப்பின் காரணமாக மீதி பணத்தை திரும்ப கொடுக்கமுடியவில்லை. இதனால் 5 கோடி ரூபாய் தர வேண்டும் என்னிடம் இருந்து எழுதி வாங்கிக்கொண்டார். இதனையடுத்து அடுத்தடுத்து பல முறை 3 கோடி ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்துள்ளேன். ஓ.ராஜாவிடம் நான் வாங்கியது 4 கோடி மட்டும் ஆனால் நான் இதுவரை ஓ.ராஜாவிற்கு 5 கோடியே மூன்று லட்சம் வரை கொடுத்து விட்டேன்.
இந்நிலையில் ஓ.ராஜா அடியாட்களுடன் எனது வீட்டிற்கு வந்து எனக்கு மேற்கொண்டு 2 கோடியே இருபத்தி ஐந்து லட்சம் கொடுக்க வேண்டும் என்றும், கொடுக்காவிட்டால் உன்னையும் உன் மனைவியையும், கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டி விட்டுச் சென்றார். தொடர்ந்து எனது பத்திரம் எழுதும் அலுவலகத்திற்கு அடியாட்களோடு வந்து ஆபாச வார்த்தைகளால் பேசியும் மிரட்டியும் சென்றுள்ளார். எனவே ஓ.ராஜாவால் எனது உயிருக்கும். எனது குடும்பத்தினர் உயிருக்கும். எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என்று எனக்கு மிகவும் பயமாக உள்ளது.
அப்படி எனது உயிருக்கும், எனது குடும்பத்தினர் உயிருக்கும் அவராலும் அல்லது மற்ற நபர்களாலும் ஏதாவது ஆபத்து நேர்ந்தால் அதற்கு முழுக் காரணம் ஓ.ராஜா தான் என தெரிவித்துள்ளார். எனவே ஓ.ராஜா-விடமிருந்து எனது உயிரையும், எனது குடும்பத்தார்கள் உயிரையும், எங்களது உடைமைகளையும், காப்பாற்றிக் கொடுக்கும்படி அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இந்த புகாரை மனு மீது போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இரண்டு தரப்பையும் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.