“இந்த தேசத்தின் பாதுகாப்பையும், பொருளாதாரத்தையும் சீர்குலைக்க ராகுல் காந்தி எல்லா முயற்சிகளையும் செய்கிறார். அவர் மிகவும் ஆபத்தான மனிதர்” என்று நடிகையும், இமாச்சல பிரதேச எம்.பி.,யுமான கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கங்கனா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ராகுல் காந்தி மிகவும் ஆபத்தான மனிதர். விஷமி. அழிவுகரமானவர். அவரால் பிரதமராக முடியாவிட்டால் இந்த தேசத்தை அழித்துவிடலாம் என்பதே அவரது செயல்திட்டமாக உள்ளது.
நமது பங்குச் சந்தையை குறிவைத்து வெளியிடப்பட்ட ஹிண்டன்பெர்க் அறிக்கை, ராகுல் காந்தி ஆதரவுடன் வெளியானது என்பது நேற்றிரவு உறுதியானது. இந்த தேசத்தின் பாதுகாப்பையும், பொருளாதாரத்தையும் சீர்குலைக்க ராகுல் காந்தி எல்லா முயற்சிகளையும் செய்கிறார்.
ராகுல் காந்தி அவர்களே, உங்கள் வாழ்நாள் முழுவதும் எதிர்க்கட்சியில் அமர தயாராகுங்கள். நாட்டு மக்கள் உங்களை ஒருபோதும் பிரதமராக்க மாட்டார்கள். நீங்கள் ஓர் அவமானம்.” என்று கடுமையாக சாடியுள்ளார்.
அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய போலி நிறுவனங்களில் செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் பங்குகளை வைத்துள்ளதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டிய நிலையில், இந்த விவகாரம் குறித்து மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த விமர்சனத்துக்கு பதிலடியாக தற்போது கங்கனா ரனாவத் ராகுல் காந்தியை சாடியுள்ளார்.
முன்னதாக, ராகுல் காந்தி தனது பதிவில், “இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடப்பதாக வைத்துக் கொள்வோம். போட்டியில் நடுவர் சமரசம் செய்கிறார் என்பது, போட்டியைப் பார்க்கும் ஒவ்வொரு நபருக்கும், போட்டியை விளையாடுபவர்களுக்கும் தெரிகிறது என்றால், அந்த போட்டி என்னவாகும்? போட்டியின் நேர்மை மற்றும் முடிவு என்னவாக இருக்கும்? போட்டியில் பங்கேற்கும் ஒருவராக நீங்கள் அதை எப்படி உணருவீர்கள்? இதுதான் இந்திய பங்குச்சந்தையில் நடக்கிறது.
செபி தலைவர் மாதாபி பூரி புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை? முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால், அதற்கு யார் பொறுப்பு? பிரதமர் மோடியா? செபி தலைவரா அல்லது கவுதம் அதானியா? கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து இதனை விசாரிக்குமா?
சில்லறை முதலீட்டாளர்களின் சொத்துகளை பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள செபியின் நேர்மை, அதன் தலைவர் மீதான குற்றச்சாட்டுகளால் கடும் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது. நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு பிரதமர் மோடி ஏன் இவ்வளவு பயப்படுகிறார் என்பதும், அந்த விசாரணையில் என்ன தெரியவரும் என்பதும் இப்போது தெளிவாகத் தெரிகிறது” என்று விமர்சித்திருந்தார்.