நேஷனல் ஹெரால்டு வழக்கில், அமலாக்கத்துறை விசாரணைக்கு காங்கிரஸ் எம்.பியும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் அழைக்கப்படலாம் என ஹிந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
புதுடில்லியை தலைமையிடமாக வைத்து செயல்படும், ‘அசோசியேட்டர் ஜர்னல் லிமிடெட்’ நிறுவனம், நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட பத்திரிகைகளை நடத்தி வந்தது. கடன் நெருக்கடியில் சிக்கிய இந்த நிறுவனத்துக்கு, காங்கிரஸ் கட்சி சார்பில், 90 கோடி ரூபாய் கடன் கொடுக்கப்பட்டது. இந்தக் கடனில் இருந்து விடுபடுவதற்காக, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை, ‘யங் இந்தியன்’ என்ற நிறுவனம் விலைக்கு வாங்கியது.
இந்நிறுவனத்தின் இயக்குனர்களாக காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா, அவருடைய மகனும், எம்.பி.,யுமான ராகுல் உள்ளனர். இந்த பரிமாற்றம், பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை பறிக்கும் வகையில் நடந்ததாக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, 2013ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், ரூ.751.9 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
இதில் நடந்துள்ள பண மோசடிகள் தொடர்பாக, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. ஏற்கனவே, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, பவன் பன்சால் ஆகியோரிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. கடந்த 2023ம் ஆண்டு ராகுலிடம் 10 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தியது. தற்போது இந்த வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் களத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில்,நேஷனல் ஹெரால்டு வழக்கில், அமலாக்கத்துறை விசாரணைக்கு காங்கிரஸ் எம்.பியும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் அழைக்கப்படலாம். வழக்கு தொடர்புடையவர்கள் அனைவரும் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரத்தில், என்னை கைது செய்ய அமலாக்கத்துறை சதி திட்டம் தீட்டி வருகிறது என ராகுல் குற்றம் சாட்டியிருந்தார். அமலாக்கத்துறை வருகைக்காக காத்திருக்கிறேன். அவர்களது டீ, பிஸ்கட் செலவு என்னுடையது என்றும் ராகுல் கூறி இருந்தார். அந்த கிண்டல், இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த சூழ்நிலையில் உண்மையாகவே நேஷனல் ஹெரால்டு வழக்கில் விசாரிப்பதற்கு அமலாக்கத்துறை ராகுல் வீட்டுக்கு செல்லப்போகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.