நீலகிரியில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பழங்குடி மக்கள் ஆய்வு மையம் மற்றும் தென்காசி ஆலங்குளத்தில் உள்ள ஆலடி அருணா லிபரல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை நடத்தியது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ராமச்சந்திரன், வெள்ளக்கோவில் சுவாமிநாதன் முபாரக் மற்றும் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா பேசியதுதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதாவது, ‘‘கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவில் என்னை பங்கேற்க அழைத்தபோது மிகவும் மகிழ்வோடு இந்த நிகழ்ச்சியின் பங்கேற்றேன். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க என்னை அழைத்ததற்கு மிக்க நன்றி…
ஐம்பெரும் விழா என்றவுடனேயே எனக்கு தலைவர் கலைஞரின் நினைவுகள்தான் ஞாபகத்திற்கு வருகிறது. 1967ல் கலைஞர் தந்த தி.மு.க.வின் ஐம்பெரும் முழக்கங்கள்தான்…
- அண்ணா வழியில் அயராது உழைப்போம்.
- ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்.
- இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்.
- வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்.
- மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி.
இது திமுக இந்தியாவிற்கு தந்த கொடை. இன்று பல மாநிலங்களில், மாநில உரிமைகள் உரக்க பேசப்படுகின்றன. எனவே, தமிழினத் தலைவர் கலைஞரின் புகழை நாடெங்கிலும் பரப்புவதற்கு நான் உறுதுணையாக இருப்பேன்.
எனக்குப் பிடித்த ஐந்து தலைவர்கள் யாரென்றால், அந்த ஐந்து தலைவர்களும் மறைந்த தலைவர்கள். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, அம்பேத்கர், டாக்டர் கலைஞர், நெல்சன் மண்டேலே. இவர்கள் ஐந்துபேரின் ஒட்டுமொத்த உருவமாக இருக்கக்கூடியவர்தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
கலைஞரைத் தொடர்ந்து 2018ல் இன்றைய திமுக தலைவர் ஸ்டாலின் ஐம்பெரும் முழக்கங்களை தந்தார்.
- கலைஞரின் கட்டளையைக் கண் போலக் காப்போம்.
- தமிழை வளர்த்து தமிழைப் போற்றுவோம்.
- அதிகாரக் குவியலை அடித்து நொறுக்குவோம்.
- மதவெறியை மாய்த்து மனிதநேயம் காப்போம்.
- வளமான தமிழகத்தை வளர்த்தெடுப்போம்.
முன்னணி மாநிலமான தமிழ்நாடு, கடந்த எட்டாண்டுகளில் பின்னுக்கு இழுக்கப்பட்டிருக்கிறது. அதுவும் கடந்த இரண்டாண்டுகளில் வரலாற்றில் நடக்காத அட்டூழியங்கள் நடந்து தமிழக உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. நம் உரிமைகளை மீட்டு மீண்டும் வளமான தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டிய வரலாற்று கடமை நமக்கு இருக்கிறது என்பதுதான் அதன் பொருள்.
எனவே, தமிழினத் தலைவர் கலைஞர் வகுத்துக் கொடுத்த பாதையில், அண்ணன் தளபதியார் வழி தொடர்வோம்’’ என பேசி அரங்கையே அதிர வைத்தார் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா..!