‘‘அரசு அதிகாரி என்பதால் அமைச்சரான என்னிடம் தலை குனிந்து தான் பேச வேண்டும், இல்லாவிட்டால் குச்சியால் அடிப்பேன்’’ என்று பெண் அரசு அதிகாரியை அமைச்சர் மிரட்டிய சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.
பொதுவாக அரசியல்வாதி என்றால் மக்கள் கூடும் இடங்களில் அவர்களின் அதிகாரம் உச்சத்தில் இருக்கும் தமிழகத்தில் கூட அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் புகார் சொல்ல வந்த பெண்ணின் தலையில் கையில் வைத்திருந்த பேப்பரால் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே போல் பொன்முடி, கே.என்.நேரு போன்றவர்களும் சர்ச்சையில் சிக்கினர்.
அதே போல் தான், மேற்கு வங்க மாநிலம் புர்பா மித்னாபுர் மாவட்டத்தில் வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளில் பெண் அதிகாரி மணிஷா சாகு என்பவர் ஈடுபட்டு இருந்தார். அவரின் உத்தரவுக்கு ஏற்ப ஊழியர்கள் அங்கு விதிகளை மீறி கட்டப்பட்டு இருந்த கடைகளை அகற்றும் பணிகளில் மும்முரமாக இருந்தனர். அரசின் பெரும் படையே அங்கே திரண்டிருந்த நிலையில், அவர்களின் நடவடிக்கைக்கு கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு உருவானது.
நேரம் செல்ல, செல்ல ஒருவித பரபரப்பான சூழல் நீடிக்க தகவலறிந்த திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த பிரமுகரும், அமைச்சருமான அகில் கிரி அங்கே வந்துள்ளார். நடப்பதைக் கண்ட அவர் சற்றும் யோசிக்காமல் கடை உரிமையாளர்களுக்கு ஆதரவாக அதிகாரிகளிடம் பேச ஆரம்பித்து இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் நிலைமை தீவிரம் அடைய கோபம் கொண்ட அமைச்சர் அகில் கிரி, ஒருமையிலும், ஏக வசனத்திலும் பெண் அதிகாரி மணிஷா சாகுவை பேச ஆரம்பித்தார். நீ ஒரு அரசு அதிகாரி, எனவே என்னிடம் தலையை குனிந்து கொண்டு தான் பேசவேண்டும், கடைகளை இடிப்பதை நிறுத்திவிடு, மறுபடியும் இதில் மூக்கை நுழைத்தால் நீ இங்கிருந்து போகவே முடியாது என்று மிரட்டல் விடுத்து இருக்கிறார்.
மிரட்டல் விடுத்ததுடன், ஆபாச வார்த்தைகளையும் சரமாரியாக பேசிய அமைச்சர் அகில் கிரி, உச்சக்கட்டமாக சொல்வதை கேட்கவில்லை என்றால் குச்சியால் உன்னை அடிப்பேன் என்று கூற மணிஷா சாகு உள்ளிட்ட பலரும் ஒரு கணம் திகைத்துப் போயினர்.
அமைச்சர் ஒருவரின் இந்த வித அராஜக போக்கை அங்குள்ள சிலர் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பகிர்ந்தனர்.
அராஜக போக்குடன் பெண் அரசு அதிகாரியை வசைபாடிய அமைச்சர் மீது முதல்வர் மம்தா பானர்ஜி கடும் நடவடிக்கை எடுப்பதோடு, அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி இருக்கின்றனர்.