மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்தவர்தான் வெங்கையாநாடு. அவருக்கு சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் ஓ.பன்னீர் செல்வம் காலில் விழுந்தவுடன், அவர் காட்டிய கறார்தான் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதியாக இருந்தவர் வெங்கையா நாயுடு. பாஜக மூத்த தலைவரான இவர் கட்சி பாகுபாடு இன்றி அனைவரிடமும் சகஜமாக பழகக்கூடியவர். இதனால் பாஜகவை சேர்ந்தவராக இருந்தாலும் கூட பல கட்சி தலைவர்களின் வீடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் வெங்கையா நாயுடு பங்கேற்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
குறிப்பாக தென்இந்திய மாநிலங்களில் உள்ள பல கட்சிகளின் தலைவர்களுக்கு வெங்கையா நாயுடு மீது நல்ல மரியாதை என்பது உள்ளது. தமிழகத்திலும் திமுக, அதிமுக என அனைத்து கட்சி தலைவர்களும் வெங்கையா நாயுடுவுடன் நல்ல உறவில் உள்ளனர். இந்நிலையில் தான் வெங்கையா நாயுடுவின் 75வது பிறந்தநாள் விழா மற்றும் அவரது 50 ஆண்டு கால அரசியல் சேவையை பாராட்டி சென்னையில் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அவர்கள் வெங்கையா நாயுடுவுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
அதன்படி முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம், தமாக தலைவர் ஜிகே வாசன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர், தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ், நடிகர் விஷால், நடிகை நமிதா உள்பட பாஜக பிரமுகர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று வெங்கையா நாயுடுவை வாழ்த்தினர்.
இந்த வேளையில் ஓ பன்னீர் செல்வம் மேடையில் நின்ற வெங்கையா நாயுடுவுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அதன்பிறகு அவர் திடீரென்று வெங்கையா நாயுடுவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். இதனை சற்றும் எதிர்பாராத வெங்கையா நாயுடு, உடனடியாக ஓ பன்னீர் செல்வத்தின் தோளை தொட்டு, ‘‘நான் உங்கள் அம்மா இல்லை. என் காலில் நீங்கள் விழக்கூடாது’’ என்று கூறினார். இதையடுத்து ஓ பன்னீர் செல்வம் சிரித்தபடி மேடையில் இருந்து இறங்கி சென்றார்.
இந்நிலையில் தான் வெங்கையா நாயுடுவின் வார்த்தைகள் கவனம் பெற்றுள்ளது. அதாவது அவர், ‘‘நான் உங்கள் அம்மா இல்லை’’ என கூறியுள்ளார். இதனை இயல்பாக அவர் ஓ பன்னீர் செல்வத்தின் தாயை மனதில் வைத்து கூறினாரா? இல்லாவிட்டால் அதிமுகவினர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அம்மா என அழைத்து அவரது காலில் பொது மேடைகளில் விழுவார்கள். அதனை நினைத்து வெங்கையா நாயுடு ஊமைக்குத்து குத்தினரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் இந்த விழாவில் வெங்கையா நாயுடு பேசினார். அப்போது அவர், ‘‘நான் எனது 14 வயதில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்ந்தேன். 18 வயதில் ஏபிவிபி இயக்கத்தில் சேர்ந்தேன். பாஜக மூத்த தலைவராக என்னுடைய மிகப்பெரிய வளர்ச்சிக்கு ஆர்எஸ்எஸ் இயக்கம் தான் காரணம். இந்திய அரசியலமைப்பின் மிகவும் உயர்ந்த 3வது அலுவலகத்தில் (துணை ஜனாதிபதி அலுவலகம்) அமர ஆர்எஸ்எஸ் தான் காரணம். இதுதான் உண்மை’’ என்றார்.
அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ். இணைக்க வாய்ப்பில்லை என எடப்பாடி தரப்பு உறுதிகாட்டிய நிலையில், பா.ஜ.க.வின் ஆதரவோடு எதையாவது செய்ய முடியுமா? என எண்ணித்தான் ஓ.பன்னீர் செல்வம் செய்வதறியாது செய்து வருகிறார் என அவருக்கு நெருக்கமானவர்களே கூறிவருவது குறிப்பிடத்தக்கது.